அரக்கனும் கதைகளும்





விடுகதைகளாலான அவளது சுருக்குப்பை
அவ்வளவு எளிதில் அவிழ்வதில்லை
இரண்டு வெற்றிலையோ ஒற்றை மண்பாக்கோ
குழந்தையின் கள்ளமற்ற சிரிப்போ
ஏதேனும் வேண்டும் ஒரு புதிரவிழ
அவளது கதைகளில்
இளவரசியைக் கடத்திப்போகும் அரக்கனின்
உயிர் எதிலிருக்குமென்று அவளுக்கு மட்டுமே தெரியும்
ஒருமுறை அது கிளியிலிருந்தது
ஒருமுறை வண்டிலிருந்தது
ஒருமுறை சமுத்திரத்தின் அடியாழத்தில்
கடல் குதிரைகளால் பாதுகாக்கப்படும்
எலுமிச்சம் பழத்திலிருந்தது
ஒருமுறை தேடிச் செல்பவனின் கனவிலிருந்தது
ஒருமுறை
அதுவரை அவிழ்க்கப்படாத புதிரொன்றிலிருந்தது
ஒருமுறை
என் வீட்டுத் தேனீர்க் கோப்பையிலிருந்தது
 இளவரசியை மீட்கப் போகும்
குதிரைவீரர்களால் நிறைந்த எனது தெருவில்
நேற்றைய தினம் அரக்கன் வந்து போனான்
இந்தமுறை அவன் கடத்திப்போனது இளவரசியையல்ல
இளவரசியைப் பற்றிய கதைகளை
விடியலில் எரிப்பார்களோ புதைப்பார்களோ
கதைகளைத் தொலைத்த பின்னிரவில்
அரக்கனைக் கொல்லும் சூட்சுமம் மறந்து
வெளிவாசலில் உறங்குகிறாள்
ஆயிரம் கதைகளாலான அந்தப் பாட்டி

                                               நன்றி: காலச்சுவடு ஜூன் 2011

No comments: