வார்த்தை விளையாட்டு





தேர்ந்த கதைசொல்லியான நீ வரலாறெழுதத் திட்டமிடுகிறாய்
நான்காயிரம் வருடமாய் ஆற்றங்கரையில் புதைந்திருந்த எருது
குதிரையாக மாறி கனைக்கத் தொடங்குகிறது
நீயெழுதும் அந்த எருதைப் பற்றிய ஆவணக் குறிப்புகளுக்கு
வெள்ளைக் குதிரையின் கதை எனப் பெயரிடுகிறாய்
எம திசையில் பிணமெரிக்கும் நாகார்ஜுனனை
புத்தனென்றே விளிக்கிறாய்
தியான புத்தனின் பின்னால் சுவரில் பதியும்
நிழலை விநாயகனென்று வழிபடுகிறாய்
வார்த்தையென்பது ஒரு கண்ணாமூச்சி
உனது வார்த்தையை வேடிக்கை பார்க்க வந்த என்னையும்
சொல் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறாய்
மொழியின் பொருண்மை வெளியில் ஆட்டம் தொடங்குகிறது
தூய்மை விரும்பியான நீ பூனைக்குட்டியாக
மாறி ஒளிந்துகொள்கிறாய்
நான் கொழுத்த பன்றியாகி வார்த்தைகளைக் கிளறுகையில்
மல வாடை வீசுவதாய் முகம் சுழிக்கிறாய்
சினந்த இராணுவ வீரனின் தொனியில்
எனக்கும் நீயே பெயரிடுவதாகக் கூறி
என்னை ஒளிந்துகொள்ளச் சொல்கிறாய்
பிடிமானமற்று சரியும் வார்த்தைகளின் வெளியில்
பதுங்கு குழி தேடிக் களைத்துப் போகிறேன்
நான் மூச்சு வாங்கும் கணத்தில் நீ கொழுத்த பூனையாக மாறி
முட்டுச் சுவரில் எழுதத் தொடங்குகிறாய்
என் பெயரை சுண்டெலியென

                                                    நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )

நிறமற்றவனின் கதை





கடல் மணலில் காலாற நடந்து வெகு காலமாகிறது
நமது தற்கொலைக்கு முன் தினம்
இறுதிச் சடங்கின் முன் தயாரிப்பு பற்றி
ஆலோசித்தபடியே உன்னோடு நடந்தது

அப்பொழுதும் இப்படித்தான் மழை பெய்தது
கரைந்து கொண்டிருந்த நமது மணல் வீட்டுக்காக
அழுதுகொண்டே திரும்பினேன்
நீயும் கரைந்து கொண்டிருந்தாய்

என் போலவே உனக்கும்
மரணத்தின் பின் வாழ்க்கை
யாருமற்றுக் கழிகிறதா

நேற்றைய மழையில் இதே
கடற்கரையில் எதிர்வந்த உன் கணவன்
எனது வெளிர் நீல சாயம்
கரைவதாய் சொல்லிப் போனான்

என் மீது விழுந்தொழுகும் இன்றைய மழை
நிறமின்றி வடிகிறது

                                                 நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )

பட்டாம்பூச்சி மேய்ப்பவன்





பட்டாம்பூச்சி மேய்ப்பவன் வந்து போகிறான்
உடம்பு முழுக்க சூழும் வண்ணத்துப் பூச்சிகளுடனும்
தொடரும் குழந்தைகளுடனும்
வருவோர் போவோர்க்கெல்லாம் கையளிக்கிறான்
விலை பேச இயலாத அவனது பட்டாம்பூச்சிகளை
அவ்வப்போது
பறக்கக் கற்றுக்கொண்ட ஒன்றிரண்டு குழந்தைகளை

அவனிடம் விசேஷமானது
மீன் தொட்டியில் விடுவதற்கென
நேர்த்தியாக  நீந்தப் பழகிய வண்ணத்துப்பூச்சி
ஒவ்வொரு  வண்ணத்துப்பூச்சியைக்  கையளிக்கும்போதும்
ஒவ்வொரு முறை நிகழ்கிறது அவனது மரணம்
பட்டாம்பூச்சியின் மூன்றாம் சிறகசைப்பில் உயிர்த்தெழும்போது
சிலுவையை மொய்க்கிறது பட்டாம்பூச்சி

கவனிப்பாரற்ற குரோட்டன்களின் நகரில்கூட
வெள்ளி முளைத்த பின்னிரவில்
பட்டாம்பூச்சி மேய்ப்பவன் வருவதுண்டு
அவன் பேசுவதேயில்லை
பட்டாம்பூச்சிகள் மட்டுமே பேசுகின்றன
இறகில் எழுதப்பட்ட வர்ணங்களின் மொழியில்

தனக்கென வண்ணத்துப்பூச்சிகளைத் தவிர ஏதுமற்ற
அவனது பயணம் தொடர்கிறது
வண்ணத்துப்பூச்சியின் மொழியைப் புசித்தபடி

                                   நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )