ஃபாசிசத்துக்கு எதிரான கவிதை இயக்கம்

( 'பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி' தொகுப்புக்கு ரமேஷ் பிரேதன் எழுதிய முன்னுரை )



     கொலை செய்வதும் தற்கொலை செய்துகொள்வதும் தடைபடும்போது உருவாகும் மனோநிலையில் கவிதைகள் உருக்கொள்கின்றன. அகம், புறம் சார் தொகை நூல்கள் தொடங்கி மாலதி மைத்ரியின் கருணை மிகு வரிகள் வரை இதை உய்த்துணரலாம்.  
 
இந்திய மொழிகளில் தடையறாத நெடும்பரப்பைக் கொண்ட கவிதை மரபு தமிழுக்கு மட்டுமே உண்டு. ஊமைகளைப் பேச வைக்கும் மதபோதகர்களைப் போல மூடர்களையும் கவிதை எழுத வைத்துவிடும் மாயமும் இம்மொழியில்தான் நிகழ்கிறது. கவிதை எழுதுதல் என்பது ஓர் இலக்கிய ஊழல். ஊழல் மலிந்த நம் சமுதாயத்தில் கவிஞர்கள் ஏராளம். சங்க இலக்கியங்களை, தமிழ்க் காப்பியங்களை, பக்திப் பனுவல்களை, திருமந்திரம், திருக்குறள், தாயுமானவர், இராமலிங்க வள்ளலார், பாரதி, பாரதிதாசன் என ஒன்றை ஒன்று தொட்டுத் தொடரும் கவிதைப் பெருவெளியை முறையாக வாசித்துக் கடக்காத எவர்க்கும் உண்மைக் கவிமனம் கூடி வராது. ஈசல்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை. கவி தன்னளவில் ஒரு வரலாறாக வேண்டும். இன்று நகல்களின் குவியலுக்குள் திணறிக்கொண்டிருக்கும் மெய்க்கவிகள் ஒரு நாள் வெளிப்படுவர். காலநதி அழுக்குகளையும் குப்பைகளையும் கரையொதுக்கிவிடும். 

இது என் நண்பர் மனோ.மோகனின் முதல் கவிதைத் தொகுப்பு. இவர் அதீதன் என்ற பெயரில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எனது படைப்பான அதீதனைத் தன் பெயராக்கிக் கொண்டவரைக் காண விழைந்தபோது என் எதிரில் வந்து நின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இவர். புனைபெயரைத் துறக்கச் சொன்னேன். சொந்தப் பெயரில் எழுது என்றேன். இவர் இவரின் பெயரில் எழுதிய கவிதைகள் இவை. ரமேஷ் – பிரேம் படைப்புகள் குறித்து பல கட்டுரைகளையும் உரைகளையும் நிகழ்த்திவரும் இவர் பின் நவீனத்துவம் சார்ந்த நூல்களில் ஆழ்ந்த வாசிப்புப் புலமை கொண்டவர். கவிதை அல்ல தத்துவமே இவரது இயங்கு தளம். ஆனால் அனைத்திற்கும் கவிதைதான் மூலம் என்பதால் கவிதையிலிருந்து தனது இலக்கிய இயக்கவியலை நிகழ்த்துகிறார். 

நான் எழுதுவது ஒரு முன்னுரையோ அணிந்துரையோ அல்ல; இது ஒரு அறிமுகவுரை. என் சக இலக்கியவாதிகளுக்கு மனோ.மோகன் என்ற புதிய படைப்பாளியை அறிமுகம் செய்கிறேன்.  

ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளைத் தொகுத்து வாசித்தபோது இவரின் தமிழ் இலக்கியத்தின் ஆழ்ந்த புலமையும் தத்துவவியல் சார் நுண்ணறிவும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. பாரதி, பாரதிதாசன், பிரபஞ்சன், ரமேஷ் பிரேதன் வரிசையில் புதுச்சேரியிலிருந்து இன்னுமொரு புதிய வெளிச்சம் கருக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இக்கவிதைகளை வாசித்தபோது உடனுக்குடன் தோன்றிய எனது எண்ணங்களை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். 

தூண்டில்காரன் கதை: 

ஏதும் சொல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது ஆறு
இணை மீனை வசியம் செய்யும்
வார்த்தைகளைச் சேகரித்தபடியே
மௌனமாய் நீந்துகிறது ஆண் மீன் 

மிகக் கச்சிதமான வரிகளில் எல்லாவற்றையும் மிக எளிமையாகச் சொல்லிவிட்டார் மனோ.மோகன். இதற்கு மேல் நீளும் கவிதையுள் செயல்படும் விவாதம் (discourse) ஆண் – பெண் உறவின் சுழிப்புகளையும் சலசலத்து ஓடும் நீரின் பன்முக நடிப்புகளையும் காட்டுகிறது. 

உண்மையில் மனோ.மோகனால் ஒரு காதல் கவிதையை எழுத இயலாது. எல்லாவற்றையும் விவாதிக்கும் அவரது செயல்பாடு மருட்சியூட்டுகிறது. அவரது கவிதைகளுக்குள்ளிருந்து வண்ணத்துப் பூச்சிகளையும் குழந்தைகளையும் காதலிகளையும் நாம் அவசியம் காப்பாற்றியாக வேண்டும். கவிதைகளுக்குள் கொலை செய்யலாம்; ஆனால் கவிதையால் கொல்லக் கூடாது. கொல்லாமை என்பது ஓர் எளிய அறவியல். கொல்லுவது என்பது எதிர் அறவியல். கொலையின் அழகியல், அரசியல், அறவியல் அனைத்தும் அடங்கியதே கவிதையியலாகும். இதன் சிறந்த உதாரணமாக சிலப்பதிகாரம் என்ற பிரதி விளங்குகிறது. தமிழ்க் கவிதையின் நெடும்பரப்பு மறம் என்ற பெயரில் கொலைத் தொழிலை ஓர் அறத்தொழிலாக முன்வைக்கிறது. கொலை செய்ய விழையாத, இச்சிக்காத தமிழ்க் கவியை நான் இதுவரை கண்டதில்லை. ‘கொலை வாளினை எடடா’ என விழிப்பிதுங்க கத்தும்போது பயமாக இருக்கிறது. இரத்த வாடை வீசும் பக்திப் பனுவல்களில் மொட்டைத் தலைகள் உருண்டோடுகின்றன. கவிதைகளால் நடந்த கொலைகளை இப்படியாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.  

பட்டாம்பூச்சி மேய்ப்பவன்: 

இயேசுவின் குறியீடு தமிழ் நவீன கவிதைகளுக்குள் அன்பின் குறியீடாகவும் தியாகத்தின் உருவகமாகவும் தன்னை இழத்தலின் மூலம் ஒரு சமூக மன எழுச்சிக்கு மூல காரணியாகவும் பல தளங்களில் இயங்குகிறது. தமிழ் மன அமைப்பில் இயேசு என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்ட புரட்சியாளனின் உருவகமாகிறார். தமிழ் நிலம் சார் ஆயர்குல நாயகமாகிறார். 

இக்கவிதையில் ஆடுகளை மேய்த்தவன் வண்ணாத்திகளை மேய்க்கிறான். இயேசு கிறித்து ஒவ்வொரு முறையும் இயேசுவாகவும் சேகுவேராவாகவும் லுமூம்பாவாகவும் பிரபாகரனாகவும் பிறக்கிறார். பட்டாம்பூச்சியின் சிறகுகளில் காணப்படும் நிறக்கோலங்கள் வாசிக்கக் கூடிய லிபிகள்தாம்; மனிதர்கள் முயற்சி செய்யவேண்டும். ஆயிரத்து முன்னூற்று முப்பத்தியொன்றாம் குறளை நீங்களும் நானும் கண்டடையலாம். 

தீர்க்க தரிசனம்: 

மர்கிரெத் துய்ராவின் எழுத்தில் அலேன் ரெஸ்னே இயக்கிய ஹிரோஷிமா மோனமூர் (ஹிரோஷிமா என் அன்பே) திரைப்படத்தை இணைக்காட்சிப் படிமமாக்கிக் காட்டுகிறது இக்கவிதை. அத்திரைப்படத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அந்தப் பூனை இக்கவிதைக்குள்ளும் ஓடுகிறது. துய்ராவும் ரெஸ்னேவும் ‘பூனையின் இருப்பு என்ன இந்த அணு ஆயுதப் போரில்’ என்று எழுப்பிய அதே கேள்வியை இக்கவிதையில் பதிவு செய்கிறார் மனோ.மோகன். தெளிந்த அரசியல் பார்வை கொண்ட கவிகள் இவரைப் போல இன்னும் வேண்டும் என்பதே எனது ஆவல். கூடங்குளத்துப் பூனைகள் பற்றியும் கல்பாக்கம் ஆட்டுக் குட்டிகள் பற்றியும் நாம் பேசவேண்டும். 

நிராயுதபாணிகளின் கூட்டுக் கனவு: 

மின் கம்பி அறுந்து கிடக்கும்
மழை இரவின் கனவு இது 

என்று தொடங்கும் இக்கவிதை ஈழ வெளியின் மழை இரவை நம் முன் கொண்டுவருகிறது; மிக எளிய சொற்களாலும் படிமங்களாலும் உருவகங்களாலும் நீர்ச் சிறைக்குள் அடைபட்ட சொந்த நிலத்தின் மக்கள் கைதிகளானதைப் பேசுகிறது. வலியை வலியென்றுதான் சொல்ல வேண்டும்; அதை வண்ணத்துப்பூச்சி என்று சொல்லக் கூடாது. இக்கவிதை தீவில் அடைக்கப்பட்ட மக்களின் தலைக்கு மேலேயும் மழை என்று சொல்கிறது. ஆக, நீரால் அடைபட்ட மக்கள் தம் நிலம் பற்றிய கனவுகளோடு தப்பிக்கப் பார்க்கிறார்கள். 

ருத்ர தேசம்: 

மிக அருமையான இக்கவிதையின்மூலம் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்ட முனைகிறது இக்கவிதைக்குள் வெளிப்படும் ஆண் தன்னிலை. 

புராணக் கதைகளையும் கட்டுக் கதைகளையும் களைத்து அடுக்கி மறு ஆக்கம் பெறும் இக்கவிதை பார்வதியின் அக்குள் வியர்வையை நக்கி சிவன் கொண்ட போதையைப் பற்றி மௌனம் கொள்கிறது. பெண்ணின் வியர்வை விந்து மட்டுமல்ல; அது சுரோனிதமும் கூட என்பது மனோ.மோகனுக்கும் தெரியவில்லை. அழகிய பெண்ணின் வியர்வையைத்தான் ரிஷிகள் அமுது என்றார்கள். 

வார்த்தை விளையாட்டு: 

பௌத்தம் வைதீகமயமானதையும் அது இன்றுவரை நிகழ்த்தும் பௌத்தத்திற்குள்ளிருந்தேயான பேரழிவுகளையும் மூர்க்கத்தோடு பதிவு செய்யும் கவிதை இது. இதன் அரசியலை இன்று வரையிலான ஈழ – இலங்கைப் போர்கள் வரை நீட்டித்து வாசிக்க முடியும். 

கோப்பைக்கு வெளியே: 

நான் பைத்தியங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன் - கதைகளாகவும் கவிதைகளாகவும்; எனினும் இன்றுவரை எந்தவொரு பைத்தியத்திற்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியைத் தந்தவனில்லை. வண்ணத்துப்பூச்சிகள் கொடூரமானவை. கொலையை மிக எளிதாகச் செய்பவை. வண்ணாத்தி என்பது பறக்கும் கவிதை. கடவுள் என்கிற சூத்திரன் ( தேவடியாள் மகன் :- பெரியார் ) எழுதிய கவிதை. சூத்திரக் கவிதைகள் இந்திய நிலப் பகுதியிலிருந்து இன்றுவரை வெளியேற்றப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. கருப்பு சிவப்பில் பறக்கிறது பட்டாம்பூச்சி; பட்டாம்பூச்சிகள் விஷம் கூடியவை. ஐந்து பட்டான்களைத் தின்றால் மரணம் நிச்சயம். பட்டாம்பூச்சிகளை மென்று விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். இப்படியான வண்ணத்துப்பூச்சிகளை இத்தொகுப்பு எங்கிலும் பறக்கவிடுகிறான் இவன். வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றி எழுதாத கவிகளில்லை. ஆனால் வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து பைத்தியத்திற்குத் தந்த முதல் கவிஞன் இவன். 

முப்பத்தியோரு கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு உருவாக்கும் மன எழுச்சி ஆன்மீகத் தன்மையற்று அரசியல் கவிதையியல் சார்ந்த கொந்தளிப்பை உணர்த்துகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்வது எளிது. ஆனால் நான் ஒரு ஃபாசிஸ்ட் இல்லை எனச் சொல்வது அரிது. ஃபாசிசத்தைத் துறத்தல் என்பதே பின் நவீனத்துவ அறவியலாகவும் மெய்யியலாகவும் இருக்கிறது. பைத்தியத்திற்குப் பட்டாம்பூச்சியைப் பிடித்துத் தரும் கவிதையியலே ஃபாசிசத்திற்கு எதிரான அரசியல். மனோ.மோகனின் இத்தொகுப்பு இந்த வேலையைக் கவினுறச் செய்கிறது. இதுவே இப்புதிய நூற்றாண்டில் வெளிவந்துள்ள முக்கியத் தொகுப்பாக இதை ஆக்குகிறது.

 

வணக்கத்துடன்

ரமேஷ் பிரேதன்

புதுச்சேரி
27 – 09 - 2012 

கனவு வெளி





கனவு வெளி முழுக்க இலவம்பஞ்சு
பிசாசுகளைப் போல் சூழும் பனி மூட்டம்
பாதம் நனைக்கும் புல்வெளி
விண்மீன் பூத்த பூமியில் ஒற்றை மரம்
மரத்தடியில் காலணிகளைக் கழற்றிவிட்டு
உச்சியிலிருக்கும் பறவையின் கூட்டில்
உறங்கத் தொடங்குகிறேன் 

பூக்கள் உதிர்ந்து காலனியை மூடுகின்றன
முட்டையிலிருந்து வெளியேறிய பறவைக் குஞ்சென
மூடிய விழிகளுக்குள் கீச்சிடுகிறது கனவு 

அனுபவத்திற்கெட்டாத பெருங்கனவு அது
கலவியைப் போலவே அலாதியானது கனவு
இரண்டுமே முற்றாய்க் கழிவதில்லை
அடுத்த இரவுவரை ஒத்திப் போடப் படுகின்றன 

பரந்த கால வெளியில்
எனது காலணிகளை யாரோ களவாடி விடுகிறார்கள்
கோடை தொடங்குகிறது
நெடுவழியெங்கும் பரவுகின்றன
காய்ந்த நெருஞ்சி முட்கள்
 
நன்றி: உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008