கலைஞனும் அதிகாரமும்


ஜாஃபர் பனாஹியை முன்வைத்து சில குறிப்புகள்

 

"எழுது. எல்லாவற்றையும் எழுது. கதையாக எழுது. ஆய்வுரையாக எழுதி விடாதே. அதிகாரத்தின் கண்காணிப்பில் நீ இருக்கிறாய். அணுசக்தி மட்டுமே மனிதரை அதிமனிதர் ஆக்கக்கூடியது. நாம் அதற்கு எதிரானவர்கள். நம்மைக் கொல்ல இந்த உலகின் எல்லா நாடுகளின் அரசுக்கும் உரிமையுள்ளது. நாம் புனைவுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். எல்லாம் புனைவுதான். கடவுளைப் போலவே விஞ்ஞானமும் புனைவுதான்."
[ரமேஷ் : பிரேம் - 2006].

ரானியப் புதிய அலை சினிமா இயக்குனர்களில் தவிர்க்க இயலாத சமகால ஆளுமை ஜாஃபர் பனாஹி. ஆரம்பத்தில் கம்பூசியா பர்தோவி, அப்பாஸ் கியரிஸ்டோமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து திரை வாழ்க்கையைத் தொடங்கிய பனாஹி அக்காலத்திலேயே நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளார். அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ’வெள்ளை பலூன்’ பனாஹியின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். அவரது முதல் திரைப்படமே கேன்ஸ் திரைப்பட விழாவில் Caméra d'Or (Golden Camera) விருதை வென்ற படமாக அமைந்தது. அதன் பிறகு வெளிவந்த பனாஹியின் அனைத்துத் திரைப்படங்களுமே பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா, வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழா முதலான பலவற்றிலும் ஏதேனுமொரு சர்வதேச விருதையேனும் பெற்ற திரைப்படமாகத்தான் அமைந்தன. பனாஹி மிகக் குறைந்த காலத்தில் சர்வதேச கவனிப்பைப் பெற்ற இயக்குனராக அறியப்பட்டார். அதேசமயம் குறிப்பிடத்தகுந்த சந்தர்ப்பங்களில் காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு உள்ளான இயக்குனராகவும் சொந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்குனராகவும் இருந்தார் என்பது முரண் நகையான ஒன்று.

பனாஹி ஓர் அமைதி விரும்பி. ஈரானில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய அமைதிக் குழுமத்தில் (National Peace Council) உறுப்பினராக இருப்பவர். ஆனாலும் ஈரானிய அரசு அவரைத் தேசிய நலனுக்கு ஊறு விளைவிப்பவராகவே கருதிவந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த பனாஹி நியூயார்க்கிலுள்ள ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். இது முஸ்லீம்களின்மீது அமெரிக்காவில் நிகழ்த்தப்படும் வாடிக்கையான கைதாக இப்போது மாறியிருக்கிறது. அதன்பிறகு 2003 ஆம் ஆண்டு ஈரானிய தகவல் அமைச்சகத்தால் (Information Ministry in Iran) கைது செய்யப்பட்டு நான்கு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார் பனாஹி. அதற்குப் பிறகும் அவர்மீது சில கைது நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கின்றன. மேலும் பனாஹி சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அழைக்கப்பட்ட காலங்களில் ஈரானிய அரசு அவருக்கான அனுமதியைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அவருடைய திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்பதை நிறுத்தி வைக்குமாறும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளது. இவையேயன்றி அவருடைய திரைப்படங்கள் சொந்த நாட்டில் திரையிடத் தடை விதிக்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. அவற்றைத் திரையரங்களில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் திரையிடுவதற்கும் தடைவிதித்துள்ளது ஈரானிய அரசு.

ஈரானில் நடந்த ஓர் இடைத் தேர்தலின்போது அதுகுறித்த ஆவணப்படம் எடுக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசியல் கைதிகளுக்காக ஈரானில் இயங்கும் எவின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பனாஹி. அச்சமயம் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவருடனேயே சேர்த்துக் கைது செய்யப்பட்டனர். அக்காலத்தில் அந்தக் குற்றச்சாட்டு நியாயமில்லாதது என்று ஒரு ஃபிரெஞ்சு செய்தி நிறுவனத்திற்குப் பனாஹியின் மனைவி கொடுத்த பேட்டியும் சிறை நடவடிக்கைகளுக்கெதிராகப் பனாஹி நிகழ்த்திய உண்ணாவிரதமும் குறிப்பிடத் தக்கனவாகும். மூன்று மாதச் சிறை வாழ்க்கைக்குப் பின் பனாஹி இரண்டு லட்சம் டாலர் பிணைத் தொகையின்மூலம் விடுதலை செய்யப்பட்டார். 

அதே வருடத்தின் இறுதியில் தேசியப் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பனாஹிக்கு ஆறுவருட சிறைத்தண்டனையும் சினிமாத் துறையில் இயங்குவதன்மீது இருபது ஆண்டு காலத் தடையும் விதிக்கப்பட்டு தீர்ப்பாகியது. இதன்மூலம் திரைப்படம் இயக்குவது, திரைக்கதை எழுதுவது, பேட்டிகள் கொடுப்பது, மருத்துவக் காரணங்களுக்காகவோ ஹஜ் புனித யாத்திரைக்காகவோ அன்றி வேறு பிற காரியங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறுவது என அனைத்திலிருந்தும் அவர் முடக்கப்பட்டார். தன் வாழ்நாள் முழுக்க திரைப்படத்தை நேசிப்பவரும் சர்வதேச விருதுகளை வெல்லும் நேர்த்தியான திரைப்படங்களை எடுத்தவருமான ஒரு இயக்குனர் தான் இயக்கும் படமொன்றுக்கு ’இதுவொரு திரைப்படமல்ல’ (this is not a film) என்று பெயரிடுவதைப் புரிந்துகொள்ள இத்தனை ஒடுக்குமுறைகளை நாம் கடந்துவர வேண்டியுள்ளது.

பனாஹி மேற்குறிப்பிட்ட திரை ஆவணத்தையும் சேர்த்து இதுவரை ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார். வெள்ளை பலூன் (The White Balloon : 1995), கண்ணாடி (The Mirror : 1997), வட்டம் (The Circle : 2000), குருதி நிறத் தங்கம் (Crimson Gold : 2003), மைதான விதியின் புறவெளி (offside : 2006), இதுவொரு திரப்படமல்ல (This Is Not A Film : 2011), மூடப்பட்ட திரைச்சீலை (Closed Curtain : 2013) ஆகியவை அவரது திரைப்படங்களாகும். இவற்றுள் ’இதுவொரு திரைப்படமல்ல’ படமும் ’மூடப்பட்ட திரைச்சீலை’ படமும் பனாஹிக்கு விதிக்கப்பட்ட இருபதாண்டுத் தடைக் காலத்தில் அந்தத் தடைக்குச் சவால் விடும் விதத்தில் எடுக்கப்பட்டவையாகும். 

*** 

வெள்ளை பலூன் (1995) புது வருடக் கொண்டாட்டத்தின்போது ஒரு சிறுமி மீன் தொட்டியில் வைத்து வளர்ப்பதற்கென தங்கமீன் வாங்க ஆசைப்படுவது, அதன் பின் நிகழ்வுகள் குறித்த படமாக அமைந்தது. இப்படத்தில் ஒரு ஏழு வயது சிறுமியைக் கதையின் மையப் பாத்திரமாகக் கொண்டு இயங்கிய கேமரா இறுதிக் காட்சியில் அவளுக்கு உதவும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பலூன் விற்கும் சிறுவனைப் பின்தொடரும்போது படம் முடியும். இதன் மூலம் முழுமைத் தன்மையும் தொடர்ச்சியறுக்கும் தன்மையும் ஒருங்கே அமைந்த நேர்த்தியான கதையாக அது அமைந்தது.

கண்ணாடி (1997) ஐந்தாறு வயதே இருக்கக்கூடிய சிறுமியொருத்தி பள்ளி முடிந்த நேரத்தில் தன்னை அழைத்துச் செல்லத் தன் தாய் வராததை அறிந்து தன் வீட்டுக்கான வழிதேடி அடைவது பற்றிய படமாகும். படத்தில் நடிக்கும் சிறுமி திடீரென தான் இனி இந்தத் திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லையென்று சொல்லிவிட்டு வெளியேறுவது இப்படத்தின் திருப்புமுனையாகும். முன் பாதியில் அவள் நடித்துக் கொண்டிருப்பதைப் படம் பிடித்த கேமரா பின் பாதியில் அவள் நடிப்பதை மறுத்து வெளியேறிப் பயணிப்பதைப் படம் பிடிக்கும். இதுவொரு திரைப்படம் தான் என்னும் பிரக்ஞையைப் பார்வையாளருக்கு ஏற்படுத்தியபடியே திரைப்படத்தின் நான்காவது சுவராக இருக்கும் கேமராவையும் சேர்த்துப் பிடிக்கப்பட்ட படமாக இது அமைந்தது. உண்மை புனைவு என்னும் இரண்டுக்கும் இடையில் நிகழும் மாய விளையாட்டைத் தன் திரைக்கதையில் நிகழ்த்தும் படம் இது.

வட்டம் (2000) வாழ்வதற்கான சவாலை எதிர்கொள்ளும் சில பெண்களின் கதைகளை ஒரே கதையமைப்புக்குள் கொண்டுவந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் காட்சிப்படுத்திய படமாகும். இப்படத்தின் முதல் காட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டது பற்றிய பதற்றத்தோடு தொடங்கும். இறுதிக் காட்சி கதையின் மையப் பாத்திரங்களாக இயங்கிய அத்தனை பெண்களும் சிறைச்சாலைக்குள் இருக்கும் காட்சியில் முடியும். உருவக நிலையில் ஒட்டுமொத்தப் பெண்களின் வாழ்நிலையை ஒரு சிறைக் கைதியின் வாழ்நிலையாகப் பொருள்கொண்டு பெண்கள் மீதான ஒடுக்குமுறையைக் காட்சிப்படுத்திய படம் இது. 

குருதி நிறத் தங்கம் (2003) ஒரு பீஸ்ஸா பட்டுவாடா செய்யும் தொழிலாளி நகைக்கடைக் கொள்ளையில் ஈடுபடுவது பற்றிய படமாகும். பெரும்பாலும் தன் படங்களில் தொழில்முறை சாராத கலைஞர்களையே நடிக்கவைக்கும் பனாஹி இப்படத்தில் பிஸ்ஸா பட்டுவாடா செய்யும் தொழிலாளியும் மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவருமான ஹுஸைன் எமாடெடின் (Hossein Emadeddin) என்பவரை மையப்பாத்திரத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படத்தின் காட்சிகளை வெட்டுவது குறித்த பண்பாடு மற்றும் இஸ்லாமிய நெறிப்படுத்தல் அமைச்சகத்தின் (Ministry of Culture and Islamic Guidance) பரிந்துரையைப் பனாஹி நிராகரித்ததால் ஈரானில் தனிப்பட்ட காட்சிகளுக்குக் கூட திரையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட படமாக இது அமைந்தது. 

மைதான விதியின் புறவெளி (2006) ஈரானுக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியை ஒட்டி எடுக்கப்பட்ட படமாகும். அப்போட்டியைக் காண விரும்பிய சில பெண்கள் ஆண்களைப் போல வேடமிட்டுக் கொண்டு மைதானத்தில் நுழைய முயற்சிப்பதையும் கால்பந்துப் போட்டியைக் காண்பது பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் காவலர்கள் அவர்களைக் கைது செய்வதையும் காட்சிப்படுத்திய படம் இது. கால்பந்தாட்டப் போட்டி என்பதையே ஒரு குறியீடாக மாற்றி ஒட்டுமொத்தப் பெண்களின்மீதான பண்பாட்டு ஒடுக்குமுறையைக் கவனப்படுத்திய படமாக இது அமைந்தது.

2010 ஆம் ஆண்டுவரைக்கும் பனாஹி இயக்கிய படங்களில் முதல் இரண்டு படங்கள் சிறுவர்களைப்பற்றிய படங்கள். ’குருதிநிறத் தங்கம்’ அவர் கேட்டறிந்த உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். மற்ற இரண்டு படங்கள் பெண்களை மையமிட்ட படங்கள். அடிப்படையில் சிறுவர் படங்களாகக் கணிக்கப்பட்ட முதல் இரண்டு படங்களும்கூட பெண் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்தான். பனாஹியின் மீதான இருபதாண்டு காலத் தடைக்கும் திரைப்படத்தை நேசிக்கும் ஒருவர் தான் இயக்கிய திரைப்பிரதியை ’இதுவொரு திரைப்படம்தான்’ என்று வெளியில் சொல்வதற்குப் பதட்டப்படும் சூழ்நிலைக்கும் மேற்கண்ட படங்கள் குறிப்பிடத்தகுந்த காரணிகளாக அமைந்துவிட்டன எனலாம்.

தன் இயக்கம் முடக்கப்பட்டு தன்மீது தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கையடக்கக் கேமராவையும் தனது கைபேசிக் கேமராவையும் வைத்துக் கொண்டு தன்னையே ஒரு ஆவணத்திற்கான பேசுபொருளாக மாற்றிக் கொள்கிறார். பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கியிருக்கும் பனாஹி அந்தக் கையடக்கக் கேமராவை இயக்கிவிட்டுத் தனிமையில் உணவருந்தும் காட்சியிலிருந்து தொடங்குகிறது ’இதுவொரு திரைப்படமல்ல’ என்னும் பெயருடைய திரைப்பிரதி. இது பனாஹி குடியிருக்கும் அடுக்ககத்திலேயே எடுக்கப்பட்ட படமாகும். சில தொலைபேசி உரையாடல்கள், தனது நண்பரும் திரைப்பட இயக்குனருமான மொஜ்தாபா மிர்தாமாஸுடன் (Mojtaba Mirtahmasb) நிகழ்த்தும் உரையாடல், தன் அடுக்ககத்திற்குக் குப்பை சேகரிக்க வரும் சேவகரிடம் நிகழ்த்தும் உரையாடல் முதலிய காட்சியமைப்புகளால் வடிவமைக்கப்பட்ட திரைப்படம் இது. நீதிமன்றத் தடையுத்தரவு குறித்த பகிர்வுகள், தான் இயக்கத் தொடங்கி அரசாங்கத்தின் கைது நடவடிக்கையால் தடைபட்டுப்போன திரைப்படத்தின் கதையமைப்பு, தன் முந்தைய படங்களில் சந்திக்க நேர்ந்த சிக்கல்கள், தற்போதைக்கு வீட்டில் முடங்கியிருக்கும் தன் நிலை என பனாஹியின் கடந்த காலக் கலை வாழ்வின் பின்விளைவுகள் பற்றிய ஆவணமாக இப்படம் அமைந்துள்ளது. 

***  

தணிக்கை முறை என்பதும் அது சார்ந்த கண்காணிப்புகளும் தேசத்திற்குத் தேசம் மாறுபடுபவை. சில நாட்டுத் திரைப்படங்களில் பெண்களை முழு நிர்வாணமாகக் காட்டுவதற்குத் தடையில்லை. சில நாடுகளில் பாலியல் சார் உறுப்புகளை மட்டும் மறைத்துவிட்டுப் பெண்களை நிர்வாணமாகக் காட்டலாம். சில தேசங்களில் குறைந்தபட்சம் பெண்கள் உள்ளாடையாவது அணிந்துகொண்ட நிலையில் காட்டப்பட வேண்டும். இவற்றிற்கு மாறாகச் சில நாட்டுப் படங்களில் பெண்களின் முக்காடு போடப்படாத முகத்தைக் காடுவதேகூடக் குற்றமாகக் கருதப்படுகிறது. காட்சிப் பாலின்பம் (Voyeurism) சார்ந்த முந்தையவை ஒரு விளிம்பு என்றால் பெண் இயக்கத்தை முடக்கும் பிந்தையது இன்னொரு விளிம்பு. இரண்டுமே ஆண் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டு நிகழ்த்தப்படுபவை. இதில் பெண்கள் புறவெளியில் வைத்தே அணுகப்படுகிறார்கள். 

அதேசமயம் இவை வெறும் ஆண் சமூகம் சார்ந்த செயல்பாடுகள் என்று மட்டும் சொல்லி நகர்ந்துவிட இயலாது. ஒரு சமூகத்தின் பண்பாடு, மதம் என்னும் இரண்டு கூறுகளும் இந்தத் தணிக்கை மற்றும் கண்காணிப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பனவாய் உள்ளன. இவை இரண்டுமேகூட ஆண் மனோநிலையில் உருவானவைதான் என்றபோதும் தனித் தனியாக அணுகப்பட வேண்டியவை. இதிலும் பண்பாடு என்பதையேகூட ஒருவிதத்தில் மதம்சார் வெளிப்பாடு என்றே புரிந்துகொள்ள இயலும். மதமும் பண்பாடும் ஆண் மனோநிலையிலிருந்தே உருவாக்கப்பட்டவை என்னும் குறிப்பு அவற்றை உருவாக்கிய வர்க்கம் சுதந்திரமான வர்க்கம் என்னும் அர்த்தத்தைக் கொடுக்கவும் சாத்தியமுண்டு. ஆனாலும் மிக ஆதியில் கண்டறியப்பட்ட சமூக ஒழுக்கவிதிகள் முதல் மிகச் சமீபத்தில் கண்டறியப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்வரை எல்லாமே கண்டுபிடித்தவர்களை ஆளுகை செய்யும் கருவிகளாகத்தான் உருப்பெற்றுள்ளன. 

நாம் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம். சகமனிதன் முதல் சமூக – பண்பாட்டு – மத – அரசதிகார நிறுவனங்கள் வரை எல்லா நிலையிலும் நாம் கண்காணிக்கப்படுகிறோம். இத்தகைய கண்காணிப்பு நம் சுதந்திரத்தை எப்போதும் சாத்தியமில்லாத ஒன்றாக நிறுத்துகிறது. ’மனிதன் சுதந்திரமானவனாக இல்லை’ என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தும் வடிவங்களாகவே இலக்கியம் மற்றும் கலையை நாம் அணுகவேண்டியிருக்கிறது. கலை, இலக்கிய வடிவங்கள் அதிகாரத்திற்கு எதிரானவையாக மட்டும் இருப்பதில்லை. அவற்றில் அதிகாரத்திற்குச் சார்பானவையும் உண்டு. ஆனால் இரண்டு நிலையிலும் அவை ஏதேனுமொரு காரணிக்கு அல்லது கருத்தமைவுக்குக் கட்டுப்பட்டு இயங்குபவையாகவே இருக்கின்றன. 

ஒரு படைப்பின் உருவாக்கத்திற்கும் அதன் வெளியீட்டுக்கும் இடையில் நீண்ட அகழியொன்றைக் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அகழியில் ஏகப்பட்ட முதலைகள். ஒவ்வொரு முதலையின் கண்காணிப்பிலிருந்தும் தாக்குதலிலிருந்தும் கரையேறி ஒரு பிரதியை வெளியிட வேண்டியிருக்கிறது. அதிகாரத்திற்குச் சார்பானவர்களால் இந்த அகழியை வெகு எளிதில் கடந்து கரையேற இயலும். அதிகாரத்திற்கு எதிராக இயங்குபவர்களுக்கு இதுவொரு யுத்தம். அதிகாரச் சார்பு நிலை சார்ந்த மேற்கண்ட இருமை எதிர்வுகூட ஒரு வசதிக்கானதுதானே தவிர இதற்கு வெளியேயும் வேறு சில சாத்தியப்பாடுகளுண்டு. குறிப்பாக ஜாஃபர் பனாஹி. 

பனாஹி தானொரு அரசியல் இயக்குனர் இல்லை என்று கூறிக் கொண்டவர். கடைசியில் அவரே தன் இருப்புக்கான அரசியல் நிலைப்பாடுகளை நிகழ்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவருக்கு வேறு வழி இல்லை. ஒன்று தான் இயங்கியாகவேண்டும். அது அடிப்படையிலேயே அரசு நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும். அல்லது மரணமெய்தவேண்டும். ஏதும் செய்யாமல் இருப்பதென்பதும் மரணத்தின் உருவக நிலைதான். இதன் விளைவாகத்தான் பனாஹி தன் வீட்டுக்குள்ளேயே ஒரு ஆவணப் படத்தை இயக்கி அதையொரு யூஎஸ்பி நினைவகத்தில் (USB flash drive) தரவேற்றி பிறந்தநாள் கேக்கில் மறைத்துவைத்து நாட்டை விட்டு வெளியேற்றுகிறார். தானொரு ஈரானியன் என்றும் தன்னுடைய தேசத்தின்மீது தனக்கு அளப்பரிய காதலுண்டு என்றும் சொன்ன கலைஞன் பனாஹி. இருந்தும் அதிகாரத்தின் சதுரங்கப் பலகை அவரை அரசின் காய் நகர்த்தலுக்கு எதிராகக் காய் நகர்த்த நிர்ப்பந்தித்திருக்கிறது. இது அதிகாரச் சார்பு நிலை அல்லது அதிகாரத்திற்கு எதிரான நிலை என்னும் இரண்டிலும் அடங்காத ஒன்று. 

மதம், பண்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஒழுங்கு விதிகள் ஆகியவை மனிதன் தன்னைத் தானே கண்காணித்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட கருத்தாக்கங்களாகும். அரசு கண்காணிப்புக்கான கருவிகளாகக் காவல்துறை, ராணுவம், நீதித்துறை முதலியவற்றைப் பயன்படுத்துகிறது. இவையன்றி தகவல் தொழில் நுட்பம் முதலாக உள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பலவுமேகூட மனிதனைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும்தான் அதிக அளவில் பயன்படுகின்றன. கண்காணிப்பு என்பது இங்கு பிறரால் கண்காணிக்கப் படுவது என்பதாக மட்டும் இல்லை. நம் மீதான ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நம்மையுமறியாமல் நாமே நம்மைக் கண்காணித்துக் கொண்டிருருக்கிறோம். ஒழுங்கு விதி மீறல் குறித்த குற்றவுணர்வு இத்தகைய கண்காணிப்புகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது. 

இயல்பில் குற்றவுணர்வென்று ஏதுமில்லை. அதிகாரம்தான் குற்றவுணர்வுகளை உருவாக்குகிறது. இத்தகைய குற்றவுணர்வுகளுக்கான கருவிகளாக அமைந்துள்ள ஒழுங்கு விதி என்பதும்கூட ஒரு வகையான அதிகாரமே என்கிறார் மிஷேல் ஃபூக்கோ. மேலுமவர் ஒழுக்கம் என்பதே அதிகாரத்தின் பௌதீக விஞ்ஞானமாகவோ உடற்கூறு விஞ்ஞானமாகவோ இயங்கும் ஒரு தொழில்நுட்பமாகத்தான் இருக்கிறதென்கிறார். ஒழுங்கு விதிகள் நம்மை நாமே கண்காணிப்பதற்குப் பரிந்துரைக்கின்றன. விதிமீறல் என்பது குற்றம் என்று அவை அறிவுறுத்துகின்றன. அவற்றின் கண்காணிப்பிலிருந்து நாம் தப்பிவிடும்போது பிற கண்காணிப்புக் கருவிகள் நம்மைத் தண்டனையை நோக்கி நகர்த்துகின்றன. சிறைச்சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கோபுரம் போல (Panopticon) நம் முதுகின் மீதும் சில விழிகள் பதிந்திருக்கின்றன. கண்காணிப்பு என்பது தனித்தியங்கும் ஒன்று அல்ல. அது அதிகாரத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அதிகாரம் கண்காணிப்பு என்பதைப் பாதுகாப்பு நடவடிக்கை என்பதாகக் கற்பிக்கிறது. ஆனாலும் அதிகாரத்திற்குட்பட்ட ஒன்று கையை விட்டு அகலாமலிருத்தல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கண்காணிப்பு இயங்குகிறது. அதிகாரத்தோடு தொடர்பு கொண்ட நிலையில் அது ஒடுக்குமுறையோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. கண்காணிப்பு என்னும் ஒற்றை வார்த்தை ஆழ்நிலையில் அதிகாரம் – கண்காணிப்பு – ஒடுக்குமுறை என்னும் மூன்று வார்த்தைகளின் இணைவாக உள்ளது.

பனாஹி அடிப்படையில் சமூக யதார்த்தம் குறித்த படங்களை இயக்கியவர். அரசின் தடை நடவடிக்கைக்கு முன்புவரை அவர் அரசுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் கைக்கொண்டவரல்ல. விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகும்கூட தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் அரசியலாக அன்றி ஈரானிய அரசைக் குற்றம்சாட்டும் விமர்சன அரசியலாக அவர் சினிமாவைப் பயன்படுத்தவில்லை. ஆனாலும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஆரோக்கியமான உரையாடலேகூட அதிகாரத்தின் பார்வையில் தனக்கெதிரான நடவடிக்கையாகத் தெரிவதற்குச் சாத்தியமிருக்கிறது. அத்தகையதொரு சாத்தியத்தின் அடிப்படையில்தான் பனாஹி குற்றவாளியாக்கப்பட்டார். மத அடிப்படைவாத சமூகமொன்றில் பெண்களின் இருப்புநிலை குறித்த காட்சிகளின்மூலம் கவன ஈர்ப்பைக் கொண்டுவர விரும்பிய பனாஹி அதையொரு இருமை எதிர்வு நோக்கிய போராட்டமாக முன்வைக்கவில்லை. ’மைதான விதியின் புறவெளி’ திரைப்படத்தில் பெண்களுக்குக் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் மறுக்கப்படுவதைக் காட்சிப்படுத்திய அவர் காவல்துறையினரின் கனிவு மிக்க அணுகுமுறையையும் சேர்த்துக் காட்சிப் படுத்தியிருப்பார். இவ்விடத்தில் அவர் சக இருப்பாக உள்ள பெண்களின் நிலை குறித்த ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். அவ்வளவுதான். ஆனாலும் சொல்லப்பட்ட தகவலின் தர்க்க நியாயங்கள் எதையும் அதிகாரம் கணக்கில் கொள்வதில்லை. அது தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டவற்றைத் தன்னுடைய தன்முனைப்புக்கு (Ego) எதிரான விஷயமாகத்தான் பார்க்கிறது. முக்கியமாக அதிகாரத்திற்கும் கலைஞனுக்குமான உறவு நிலையில் இந்தத் தன்முனைப்பு முக்கியப் பங்காற்றும் ஒன்றாக இருக்கிறது. 

அதிகாரம் அர்த்த உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒன்றாக இல்லை. ஆனால் ஒரு தீவிரமான அரசியல் கலைஞன் நிகழ்த்தப்படுவனவற்றின் இரண்டாம்தள அர்த்தங்களைக் கண்டறிபவனாக இருக்கிறான். இதை இப்படியும் சொல்லலாம். நிகழ்த்தப்படுவனவற்றின் இரண்டாம் தள அர்த்தங்களைக் கண்டறிபவன் தீவிரமான அரசியல் கலைஞனாக உருப்பெறுகிறான். இரண்டாம் தள அர்த்தம் அதிகாரத்தின் மேல் தள அர்த்தத்தோடு பொருந்தாத நிலையில் அதிகாரத்திற்கும் கலைஞனுக்குமிடையிலான பிணக்கு இயல்பிலேயே உற்பத்தியாகிவிடுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் இயங்கும் அர்த்த உற்பத்தி பன்மைத்துவத்தை நோக்கி நகரக் கூடியதாக இருக்கிறது. அது இயல்பிலேயே அதிகாரத்தை மையமிழக்கச் செய்யக் கூடியதாக இருக்கிறது. இதற்கு மாறாக அதிகாரம் தனக்கெதிராக இயங்கும் கருத்தியல்களை ஒடுக்குவதன்மூலம் தன் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்கிறது.

கலைஞன் அதிகாரத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்கிறான். இதன்மூலம் அவனொரு இருமுனைப்பட்ட உரையாடலுக்குத் தயாராகிறான். அதிகாரமும் கலைஞனைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதுபோலவே பாவனை செய்கிறது. ஆனாலும் அது தனக்கெதிரான உரையாடலை மட்டுப்படுத்தவே விரும்புகிறது. கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாத நிலையில் காவல்துறை, சட்டம், ராணுவம் போன்ற சகல ஒடுக்குமுறைக் கருவிகளையும் பயன்படுத்துவதன்மூலம் தனக்கான வெற்றியை நிலைநிறுத்த முனைகிறது. அதிகாரத்தின் குறைபாடுகளைக் கவனப்படுத்தும் ஆலோசகனாக இயங்க விரும்பும் கலைஞனைக்கூட அது தன்னுடைய இருமை எதிர்வாகவே நிறுத்திப் புரிந்துகொள்கிறது. அரசின் இருமை எதிர்வாக நிறுத்தப்பட்டு இயக்கம் முடக்கப்பட்ட பனாஹியின் இருப்பு அதிகார இயங்குவிதியின் இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளப் பட வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

***  

பனாஹியின் ’வட்டம்’, ’மைதான விதியின் புறவெளி’ ஆகிய இரண்டும் சமூக வெளியில் பெண் இருப்பு குறித்த உரையாடலை முன்னிறுத்திய படங்கள். பனாஹி தேசப் பாதுகாப்புக்கும் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கும் ஊறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதில் இந்த இரண்டு படங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ’வட்டம்’ வெளிவந்ததற்கும் ’மைதான விதியின் புறவெளி’ வெளிவந்ததற்கும் இடையில் ஆறு ஆண்டுகள் கடந்திருந்தன. இந்த ஆறு ஆண்டுகளில் பனாஹிக்கு ஏற்பட்ட கலை முதிர்ச்சியையும் பக்குவத்தையும் ’மைதான விதியின் புறவெளி’யில் உணர முடிகிறது. இரண்டு படங்களுமே உரிமை மறுக்கப்பட்ட சமூக இருப்பில் பெண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்த படங்களாக அமைந்தவை. இரண்டும் பெண்கள் பற்றிய படங்கள் என்பதைவிடவும் பெண் குற்றவாளிகளை மையமிட்ட படங்கள் என்பதே சரியானது. முந்தையது பெண்கள் தங்கள் வலியிலிருந்து மீள்வதன்மீது திணிக்கப்படும் இயக்க மறுப்பு பற்றியது. பிந்தையது பெண்கள் கொண்டாட்டத்தை அனுபவிப்பதன்மீது திணிக்கப்படும் இயக்க மறுப்பு பற்றியது. முந்தையது யதார்த்த நோக்கிலானது. பிந்தையது குறியீட்டு நோக்கிலானது. முந்தையதில் படத்தின் கடைசிக் காட்சி சிறைச்சாலையில் அடைபட்ட பெண்களைக் காட்சிப் படுத்தியிருக்கும். பிந்தையதின் கடைசிக் காட்சி காவல்துறை வாகனத்திலிருந்து புறவெளியை நோக்கித் தப்பிக்கும் பெண்களைப் படம் பிடித்திருக்கும். முந்தையது இருப்பு நிலை குறித்த யதார்த்தம் எனில் பிந்தையது விருப்புநிலை குறித்த யதார்த்தம்.  

பெண்களுக்கான ஒழுக்கவிதிகள் என்னும் பெயரில் ஒடுக்குமுறையைக் கடைபிடிக்கும் ஒரு மதவாத அரசு பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கவனப்படுத்தும் மேற்கண்ட இரண்டு படங்களையும் எவ்வாறு அணுகியிருக்கிறது என்பதன் விளைவுதான் பனாஹியின்மீதான குற்றச்சாட்டு. நடைமுறையில் ஒழுங்குவிதி அதிகாரத்தின் கருவியாகச் செயல்படுகிறது. இதற்கு மாறாக விருப்பம் என்பது எல்லா இடத்திலும் கலைந்து பெருகும் இயல்புணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கிறது. ஒழுங்கு விதி கட்டுப்பாட்டை விதிக்கிறது. விருப்பம் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு இயங்க முயற்சிக்கிறது. இரண்டுக்கும் இடையிலான முரண் வெளியில் குற்றச்செயல்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அடிப்படையில் குற்றம் என்பது ஒரு பொருள் அல்ல. அதுவொரு அதிகாரத்தால் உருவாக்கப்படும் கருத்தாக்கம். எவை எவை குற்றச் செயல்கள் என்பதை அதிகார நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. பனாஹியின் விஷயத்தில் தேசப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கை என்பதாக அந்தக் குற்றச்சாட்டு தீர்மானிக்கப்படுகிறது. பனாஹி அரசியல் கைதியாகக் கருதப்படுகிறார். உண்மையில் பனாஹி செய்த குற்றம் திரைப்படமெடுத்தது. ஒரு கலைஞனின் சுதந்திரம் என்பதைக் கடந்து அவனது ஒட்டுமொத்த இயக்கம் என்பதையேகூட ஒரு அரசு என்னவாக அணுகுகிறது என்னும் கேள்வியைப் பனாஹியின் வழக்கு ஏற்படுத்துகிறது. அதிகாரத்திற்கும் கலைஞர்களுக்கும் உள்ள உறவு ஒரு சிறைச்சாலைக்கும் அரசியல் குற்றவாளிக்கும் உள்ள உறவுதானா என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. அதிகாரம் பேசுகிறது. அது பேசுவதை திருப்பிப் பேச நம்மையும் அனுமதிக்கிறது. அதற்கு மாறாக நாம் சுயமாகப் பேசத் தொடங்கும்போது நம் குரல்வளையை நெறிக்கிறது. இங்கு அதிகாரம் என்பது வெறும் அரசு மட்டும் இல்லை.

முன்பு பனாஹியின் திரைப் பாத்திரங்கள் குற்றவாளிகளாக இருந்தன. இப்போது பனாஹி என்னும் கலைஞனே குற்றவாளியாக இருக்கிறான். தனது குற்ற விசாரனையின்போது அவன் இப்படிச் சொன்னான் : ”நான் ஜாஃபர் பனாஹி. மற்றுமொரு முறை அறிவிக்கிறேன். நானொரு ஈரானியன். என்னுடைய தேசத்தைக் காதலிக்கும் ஒருவன். அந்தக் காதலுக்கான விலையைத்தான் இப்போது நான் செலுத்திக் கொண்டிருக்கிறேன். அவசியமேற்பட்டால் இந்த விலையை மீண்டும் மீண்டும் செலுத்த நான் விருப்பமாயிருக்கிறேன்”. இந்தப் பதிலை இன்னும் சில முறையும் சொல்ல நேரும் சந்தர்ப்பத்தத்தைச் சூழல் அவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கலைஞனின்மீது இருபதாண்டுக் காலம் தடை விதிக்கப்பட்ட பிறகும் அவனிடம் கையடக்கக் கேமராவும் செல்பேசிக் கேமராவும் மிச்சமிருக்கின்றன. அவன் ’இதுவொரு திரைப்படமல்ல’ என்று சொல்லிக் கொண்டே இன்னும் சில திரைப்படங்களை இயக்குவான். அவற்றையும் ஏதேனுமொரு உணவுப் பண்டத்தில் ஒளித்து தேசம் தேசமாக எடுத்துச் செல்வான். அவன்மீது தடைவிதித்த அதிகாரத்தின் மரண அறிவிப்பாக அல்ல. ஒரு கலைஞன் இன்னும் இறந்துவிடவில்லை என்பதின் அறிவிப்பாக.

நன்றி: வலசை, நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன்.

 

No comments: