ஃபாசிசத்துக்கு எதிரான கவிதை இயக்கம்

( 'பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி' தொகுப்புக்கு ரமேஷ் பிரேதன் எழுதிய முன்னுரை )



     கொலை செய்வதும் தற்கொலை செய்துகொள்வதும் தடைபடும்போது உருவாகும் மனோநிலையில் கவிதைகள் உருக்கொள்கின்றன. அகம், புறம் சார் தொகை நூல்கள் தொடங்கி மாலதி மைத்ரியின் கருணை மிகு வரிகள் வரை இதை உய்த்துணரலாம்.  
 
இந்திய மொழிகளில் தடையறாத நெடும்பரப்பைக் கொண்ட கவிதை மரபு தமிழுக்கு மட்டுமே உண்டு. ஊமைகளைப் பேச வைக்கும் மதபோதகர்களைப் போல மூடர்களையும் கவிதை எழுத வைத்துவிடும் மாயமும் இம்மொழியில்தான் நிகழ்கிறது. கவிதை எழுதுதல் என்பது ஓர் இலக்கிய ஊழல். ஊழல் மலிந்த நம் சமுதாயத்தில் கவிஞர்கள் ஏராளம். சங்க இலக்கியங்களை, தமிழ்க் காப்பியங்களை, பக்திப் பனுவல்களை, திருமந்திரம், திருக்குறள், தாயுமானவர், இராமலிங்க வள்ளலார், பாரதி, பாரதிதாசன் என ஒன்றை ஒன்று தொட்டுத் தொடரும் கவிதைப் பெருவெளியை முறையாக வாசித்துக் கடக்காத எவர்க்கும் உண்மைக் கவிமனம் கூடி வராது. ஈசல்களுக்கு ஒரு நாள் வாழ்க்கை. கவி தன்னளவில் ஒரு வரலாறாக வேண்டும். இன்று நகல்களின் குவியலுக்குள் திணறிக்கொண்டிருக்கும் மெய்க்கவிகள் ஒரு நாள் வெளிப்படுவர். காலநதி அழுக்குகளையும் குப்பைகளையும் கரையொதுக்கிவிடும். 

இது என் நண்பர் மனோ.மோகனின் முதல் கவிதைத் தொகுப்பு. இவர் அதீதன் என்ற பெயரில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். எனது படைப்பான அதீதனைத் தன் பெயராக்கிக் கொண்டவரைக் காண விழைந்தபோது என் எதிரில் வந்து நின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இவர். புனைபெயரைத் துறக்கச் சொன்னேன். சொந்தப் பெயரில் எழுது என்றேன். இவர் இவரின் பெயரில் எழுதிய கவிதைகள் இவை. ரமேஷ் – பிரேம் படைப்புகள் குறித்து பல கட்டுரைகளையும் உரைகளையும் நிகழ்த்திவரும் இவர் பின் நவீனத்துவம் சார்ந்த நூல்களில் ஆழ்ந்த வாசிப்புப் புலமை கொண்டவர். கவிதை அல்ல தத்துவமே இவரது இயங்கு தளம். ஆனால் அனைத்திற்கும் கவிதைதான் மூலம் என்பதால் கவிதையிலிருந்து தனது இலக்கிய இயக்கவியலை நிகழ்த்துகிறார். 

நான் எழுதுவது ஒரு முன்னுரையோ அணிந்துரையோ அல்ல; இது ஒரு அறிமுகவுரை. என் சக இலக்கியவாதிகளுக்கு மனோ.மோகன் என்ற புதிய படைப்பாளியை அறிமுகம் செய்கிறேன்.  

ஒட்டுமொத்தமாக இக்கவிதைகளைத் தொகுத்து வாசித்தபோது இவரின் தமிழ் இலக்கியத்தின் ஆழ்ந்த புலமையும் தத்துவவியல் சார் நுண்ணறிவும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. பாரதி, பாரதிதாசன், பிரபஞ்சன், ரமேஷ் பிரேதன் வரிசையில் புதுச்சேரியிலிருந்து இன்னுமொரு புதிய வெளிச்சம் கருக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இக்கவிதைகளை வாசித்தபோது உடனுக்குடன் தோன்றிய எனது எண்ணங்களை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன். 

தூண்டில்காரன் கதை: 

ஏதும் சொல்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது ஆறு
இணை மீனை வசியம் செய்யும்
வார்த்தைகளைச் சேகரித்தபடியே
மௌனமாய் நீந்துகிறது ஆண் மீன் 

மிகக் கச்சிதமான வரிகளில் எல்லாவற்றையும் மிக எளிமையாகச் சொல்லிவிட்டார் மனோ.மோகன். இதற்கு மேல் நீளும் கவிதையுள் செயல்படும் விவாதம் (discourse) ஆண் – பெண் உறவின் சுழிப்புகளையும் சலசலத்து ஓடும் நீரின் பன்முக நடிப்புகளையும் காட்டுகிறது. 

உண்மையில் மனோ.மோகனால் ஒரு காதல் கவிதையை எழுத இயலாது. எல்லாவற்றையும் விவாதிக்கும் அவரது செயல்பாடு மருட்சியூட்டுகிறது. அவரது கவிதைகளுக்குள்ளிருந்து வண்ணத்துப் பூச்சிகளையும் குழந்தைகளையும் காதலிகளையும் நாம் அவசியம் காப்பாற்றியாக வேண்டும். கவிதைகளுக்குள் கொலை செய்யலாம்; ஆனால் கவிதையால் கொல்லக் கூடாது. கொல்லாமை என்பது ஓர் எளிய அறவியல். கொல்லுவது என்பது எதிர் அறவியல். கொலையின் அழகியல், அரசியல், அறவியல் அனைத்தும் அடங்கியதே கவிதையியலாகும். இதன் சிறந்த உதாரணமாக சிலப்பதிகாரம் என்ற பிரதி விளங்குகிறது. தமிழ்க் கவிதையின் நெடும்பரப்பு மறம் என்ற பெயரில் கொலைத் தொழிலை ஓர் அறத்தொழிலாக முன்வைக்கிறது. கொலை செய்ய விழையாத, இச்சிக்காத தமிழ்க் கவியை நான் இதுவரை கண்டதில்லை. ‘கொலை வாளினை எடடா’ என விழிப்பிதுங்க கத்தும்போது பயமாக இருக்கிறது. இரத்த வாடை வீசும் பக்திப் பனுவல்களில் மொட்டைத் தலைகள் உருண்டோடுகின்றன. கவிதைகளால் நடந்த கொலைகளை இப்படியாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.  

பட்டாம்பூச்சி மேய்ப்பவன்: 

இயேசுவின் குறியீடு தமிழ் நவீன கவிதைகளுக்குள் அன்பின் குறியீடாகவும் தியாகத்தின் உருவகமாகவும் தன்னை இழத்தலின் மூலம் ஒரு சமூக மன எழுச்சிக்கு மூல காரணியாகவும் பல தளங்களில் இயங்குகிறது. தமிழ் மன அமைப்பில் இயேசு என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்ட புரட்சியாளனின் உருவகமாகிறார். தமிழ் நிலம் சார் ஆயர்குல நாயகமாகிறார். 

இக்கவிதையில் ஆடுகளை மேய்த்தவன் வண்ணாத்திகளை மேய்க்கிறான். இயேசு கிறித்து ஒவ்வொரு முறையும் இயேசுவாகவும் சேகுவேராவாகவும் லுமூம்பாவாகவும் பிரபாகரனாகவும் பிறக்கிறார். பட்டாம்பூச்சியின் சிறகுகளில் காணப்படும் நிறக்கோலங்கள் வாசிக்கக் கூடிய லிபிகள்தாம்; மனிதர்கள் முயற்சி செய்யவேண்டும். ஆயிரத்து முன்னூற்று முப்பத்தியொன்றாம் குறளை நீங்களும் நானும் கண்டடையலாம். 

தீர்க்க தரிசனம்: 

மர்கிரெத் துய்ராவின் எழுத்தில் அலேன் ரெஸ்னே இயக்கிய ஹிரோஷிமா மோனமூர் (ஹிரோஷிமா என் அன்பே) திரைப்படத்தை இணைக்காட்சிப் படிமமாக்கிக் காட்டுகிறது இக்கவிதை. அத்திரைப்படத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அந்தப் பூனை இக்கவிதைக்குள்ளும் ஓடுகிறது. துய்ராவும் ரெஸ்னேவும் ‘பூனையின் இருப்பு என்ன இந்த அணு ஆயுதப் போரில்’ என்று எழுப்பிய அதே கேள்வியை இக்கவிதையில் பதிவு செய்கிறார் மனோ.மோகன். தெளிந்த அரசியல் பார்வை கொண்ட கவிகள் இவரைப் போல இன்னும் வேண்டும் என்பதே எனது ஆவல். கூடங்குளத்துப் பூனைகள் பற்றியும் கல்பாக்கம் ஆட்டுக் குட்டிகள் பற்றியும் நாம் பேசவேண்டும். 

நிராயுதபாணிகளின் கூட்டுக் கனவு: 

மின் கம்பி அறுந்து கிடக்கும்
மழை இரவின் கனவு இது 

என்று தொடங்கும் இக்கவிதை ஈழ வெளியின் மழை இரவை நம் முன் கொண்டுவருகிறது; மிக எளிய சொற்களாலும் படிமங்களாலும் உருவகங்களாலும் நீர்ச் சிறைக்குள் அடைபட்ட சொந்த நிலத்தின் மக்கள் கைதிகளானதைப் பேசுகிறது. வலியை வலியென்றுதான் சொல்ல வேண்டும்; அதை வண்ணத்துப்பூச்சி என்று சொல்லக் கூடாது. இக்கவிதை தீவில் அடைக்கப்பட்ட மக்களின் தலைக்கு மேலேயும் மழை என்று சொல்கிறது. ஆக, நீரால் அடைபட்ட மக்கள் தம் நிலம் பற்றிய கனவுகளோடு தப்பிக்கப் பார்க்கிறார்கள். 

ருத்ர தேசம்: 

மிக அருமையான இக்கவிதையின்மூலம் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்ட முனைகிறது இக்கவிதைக்குள் வெளிப்படும் ஆண் தன்னிலை. 

புராணக் கதைகளையும் கட்டுக் கதைகளையும் களைத்து அடுக்கி மறு ஆக்கம் பெறும் இக்கவிதை பார்வதியின் அக்குள் வியர்வையை நக்கி சிவன் கொண்ட போதையைப் பற்றி மௌனம் கொள்கிறது. பெண்ணின் வியர்வை விந்து மட்டுமல்ல; அது சுரோனிதமும் கூட என்பது மனோ.மோகனுக்கும் தெரியவில்லை. அழகிய பெண்ணின் வியர்வையைத்தான் ரிஷிகள் அமுது என்றார்கள். 

வார்த்தை விளையாட்டு: 

பௌத்தம் வைதீகமயமானதையும் அது இன்றுவரை நிகழ்த்தும் பௌத்தத்திற்குள்ளிருந்தேயான பேரழிவுகளையும் மூர்க்கத்தோடு பதிவு செய்யும் கவிதை இது. இதன் அரசியலை இன்று வரையிலான ஈழ – இலங்கைப் போர்கள் வரை நீட்டித்து வாசிக்க முடியும். 

கோப்பைக்கு வெளியே: 

நான் பைத்தியங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன் - கதைகளாகவும் கவிதைகளாகவும்; எனினும் இன்றுவரை எந்தவொரு பைத்தியத்திற்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியைத் தந்தவனில்லை. வண்ணத்துப்பூச்சிகள் கொடூரமானவை. கொலையை மிக எளிதாகச் செய்பவை. வண்ணாத்தி என்பது பறக்கும் கவிதை. கடவுள் என்கிற சூத்திரன் ( தேவடியாள் மகன் :- பெரியார் ) எழுதிய கவிதை. சூத்திரக் கவிதைகள் இந்திய நிலப் பகுதியிலிருந்து இன்றுவரை வெளியேற்றப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. கருப்பு சிவப்பில் பறக்கிறது பட்டாம்பூச்சி; பட்டாம்பூச்சிகள் விஷம் கூடியவை. ஐந்து பட்டான்களைத் தின்றால் மரணம் நிச்சயம். பட்டாம்பூச்சிகளை மென்று விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். இப்படியான வண்ணத்துப்பூச்சிகளை இத்தொகுப்பு எங்கிலும் பறக்கவிடுகிறான் இவன். வண்ணத்துப் பூச்சிகளைப் பற்றி எழுதாத கவிகளில்லை. ஆனால் வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து பைத்தியத்திற்குத் தந்த முதல் கவிஞன் இவன். 

முப்பத்தியோரு கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு உருவாக்கும் மன எழுச்சி ஆன்மீகத் தன்மையற்று அரசியல் கவிதையியல் சார்ந்த கொந்தளிப்பை உணர்த்துகிறது. நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்வது எளிது. ஆனால் நான் ஒரு ஃபாசிஸ்ட் இல்லை எனச் சொல்வது அரிது. ஃபாசிசத்தைத் துறத்தல் என்பதே பின் நவீனத்துவ அறவியலாகவும் மெய்யியலாகவும் இருக்கிறது. பைத்தியத்திற்குப் பட்டாம்பூச்சியைப் பிடித்துத் தரும் கவிதையியலே ஃபாசிசத்திற்கு எதிரான அரசியல். மனோ.மோகனின் இத்தொகுப்பு இந்த வேலையைக் கவினுறச் செய்கிறது. இதுவே இப்புதிய நூற்றாண்டில் வெளிவந்துள்ள முக்கியத் தொகுப்பாக இதை ஆக்குகிறது.

 

வணக்கத்துடன்

ரமேஷ் பிரேதன்

புதுச்சேரி
27 – 09 - 2012 

கனவு வெளி





கனவு வெளி முழுக்க இலவம்பஞ்சு
பிசாசுகளைப் போல் சூழும் பனி மூட்டம்
பாதம் நனைக்கும் புல்வெளி
விண்மீன் பூத்த பூமியில் ஒற்றை மரம்
மரத்தடியில் காலணிகளைக் கழற்றிவிட்டு
உச்சியிலிருக்கும் பறவையின் கூட்டில்
உறங்கத் தொடங்குகிறேன் 

பூக்கள் உதிர்ந்து காலனியை மூடுகின்றன
முட்டையிலிருந்து வெளியேறிய பறவைக் குஞ்சென
மூடிய விழிகளுக்குள் கீச்சிடுகிறது கனவு 

அனுபவத்திற்கெட்டாத பெருங்கனவு அது
கலவியைப் போலவே அலாதியானது கனவு
இரண்டுமே முற்றாய்க் கழிவதில்லை
அடுத்த இரவுவரை ஒத்திப் போடப் படுகின்றன 

பரந்த கால வெளியில்
எனது காலணிகளை யாரோ களவாடி விடுகிறார்கள்
கோடை தொடங்குகிறது
நெடுவழியெங்கும் பரவுகின்றன
காய்ந்த நெருஞ்சி முட்கள்
 
நன்றி: உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008

கூழாங்கல்



மழை ஓய்ந்த மரத்தடியில்
கிளை உலுக்கி விளையாடுகையில்
இன்னொரு முறை மழை பெய்கிறது

தூக்கம் முழுக்க
கனவுகளெனப் பெய்துவிட்டு
அதிகாலை மொட்டை மாடி வடிகுழாயில்
இன்னொரு முறை மழை பெய்கிறது

பேருந்துச் சக்கரத்தில்
நசுங்கும் மழையின் குருதிக்கறை 
அவ்வப்போது ஆடையெங்கும்

சிமண்ட் ஓடுகளில் பெய்யும்போது மட்டும்
கூழாங்கல் ஆகிவிடுகிறது மழை

உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008

நரசிம்மனின் கடைசிப் பொழுது




இரண்யனின் வயிறு கிழித்தெறிந்த இரத்தக் கறையோடு
கடற்கரையெங்கும் உலவித் திரிகிறான் நரசிம்மன்
பிடரி முழுக்க நரைத்த மயிர்
மேனியெங்கும் சுருக்கம்
முதுமையால் தடுமாறுகிறது அவன் நடை

கடலென்பது பிரபஞ்சம்
கரையென்பது குட்டித் தீவு
தனித் தீவில் ஒற்றை மிருகமாய்
பசித்தலைகிறான் நரசிம்மன்
வயிறு கிழித்துப் பசியாற
மனிதர்களில்லாத தேசமது

கடற்கரையெங்கும் யாசித்துத் திரிகிறான் நரசிம்மன்
மண் கூடுகளில் உள் நுழைந்து
தாழிட்டுக் கொள்கின்றன குட்டி நண்டுகள்

 நன்றி : உயிர் எழுத்து ஆகஸ்ட் 2008

தீர்க்கதரிசனம்

 

யாருமற்ற  இதுபோன்றதொரு இரவின் தனிமையில்
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட
அந்தப் பூனையின் 'மியாவ்வைத் தவிர

நான் குடிக்கும் பால் அதற்கென்றானது
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்
அது மூத்திரமிடுவதற்கென்றானது
வாரத்தைகள் அற்ற என்
அறையின் தனிமையை நிறைத்த படியே
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'

பகல் பொழுதில்
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை

இன்றைய அந்தியில்
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட
என் தெருவின் சிதிலங்களூடே
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை
'மியாவ்வும் கூட இல்லை

தூண்டில் காரன் கதை




ஏதும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு
இணைமீனை வசியம் செய்யும்
வார்த்தைகளைச் சேகரித்தபடியே
மௌனமாய் நீந்துகிறது ஆண்மீன்

எதிர்வரும் பெண்மீன்
தான் ஆற்றை விழுங்குவது பற்றியும்
தன் வயிற்றில் பேராறு வளர்வது பற்றியும்
சொல்லியபடியே விழுங்கிவிடுகிறது ஆண்மீனை
குழந்தைமையின் குறும்புடன்
உள்வயிற்றின் பெருவெளியில்
நீந்தத் தொடங்குகிறது ஆண்மீன்

தன் துணையை விழுங்கும்
ஒவ்வொரு பெண்மீனுக்கும்
உதட்டில் ஊசி வடிவக் குழலும்
அடிவயிற்றில் ஆறு கால்களும் முளைக்க
வாடிக்கையாகி விடுகிறது
நதியின் எல்லை கடந்து பறப்பது

தக்கையாடும் தருணத்தை எதிர்நோக்கும்
தூண்டில்காரனுக்கு ஆற்று நீரில் மிச்சமிருப்பது
நீர்வெளியில் துள்ளும்
பெண்மீன் பட்டாம்பூச்சியாவது பற்றிய
கதைகள் மட்டுமே

நன்றி: உயிர் எழுத்து டிசம்பர் 2008
 

தயவு செய்து என்னைப் போகவிடு

கட்டி முடிக்கப் படாத எனது குடியிருப்பில்
உனக்கென்று ஒரு தனியறையும்
கொஞ்சம் கனவுமிருக்கிறது
தயவு செய்து என்னைப் போகவிடு

மௌனமாய் நகரும் உனது நிமிடங்களைக் கடத்துவது
எனது வார்த்தைகளுக்கு இன்னும் கைகூடவில்லை
என் கனவின் நிறம் பச்சை
உனது கனவின் நிறம் எனக்குத் தெரியாது
ஒவ்வொரு கணமும் பொய்த்துக் கொண்டிருக்கிறது புரிதல்
தயவு செய்து என்னைப் போகவிடு

இரவினைத் தின்னும் கனவொன்றில்
நீயொரு மாமிசப் பட்சியாகியிருந்தாய்
கூரையில்லாத உனதறையின் வழியே
புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் போகும்
எனது முதுகை வெறித்துக் கொண்டிருந்தாய்
உன் யோசனை விபரீதமானது
தயவு செய்து என்னைப் போகவிடு


நன்றி: புதுப்புனல் டிசம்பர் 2009

புதைவெளி





கருடன் பார்த்து வெகு காலமாகிறது
எப்பொழுதேனும் வலசை போகின்றன நாரைகள்
கம்பிக் கதவினுள் பொமரேனியன் டாபர்மேன்
பேருந்துச் சக்கரத்தில் கவனிப்பாரற்று
எஞ்சிய தெருநாய்கள்


முயலும் காட்டுப் பூனையும் பிடித்து
விற்றுப் போன பழைய குறவன்
பிச்சை எடுக்கவேனும் வந்து போகிறான்
வேட்டைக்
குறவனைப்
பிச்சைக் காரனாக்கியது
வனமற்ற வனத்துறை

அவனது ஞாபகத்தில்
எமது திணை நிலத்தின் பச்சைய
வாசனை

தை முதல் நாள்
ஊர்க்கோயிலில் பொங்கலிட
பொறுக்கிய சுள்ளிகளின்
நெருப்பில் விரிகிறது
பழைய தோப்பு


பேருந்து நெரிசலில் சிக்கிய எனது
ஞாபகத்தின் கீழடுக்கில் நசுங்கும் 
பழைய கிராமதின் நில வரைபடத்தை
இறகுகளின் நிழல் விழாத
காய்ந்த இந்த நகருக்குள்
வாழ நேர்ந்துவிட்ட உன்னிடம்
எப்படிக் கையளிப்பது மகளே


நன்றி: உயிர் எழுத்து ஏப்ரல் 2012

போதையைக் கொண்டாடும் பித்தனின் குறிப்புகள்

     பாரதியின் பாடல் பெற்ற தலமான சித்தானந்த சுவாமி கோவிலுக்குச் சற்று தள்ளி சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறையிருக்கும் சுடுகாட்டுக்கு எதிரே கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலிருக்கும் சாராயக்கடைக்கு ரமேஷ் பிரேதனுடன் போவதுண்டு. [சாராயம் அருந்துவதில்லையென்றாலும் சாராயக் கடைகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு சிற்பங்களை ரசிப்பதற்காகவே கோவிலுக்குச் செல்வதுபோல]. மதில்களில் விளையாடும் குரங்குக் குட்டிகளும் காலடியில் உரசிச் செல்லும் பன்றிகளும் பத்தடி தூரத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் ஆடவருமென அவ்விடத்தின் வாழ்க்கை நியதிகளே தனியானதாயிருக்கும். இருப்பதற்கு நிலமும் செரிப்பதற்கு உணவுமில்லாத அதுபற்றிய கவலை சிறிதுமில்லாத உடல்களை அங்கே காணமுடியும். ஒவ்வொருமுறையும் இரண்டு ரூபாய் பணத்திற்காகவோ  உண்ணும் மரவள்ளிக்கிழங்கிலாவது மணிலாக் கொட்டையிலாவது பங்கு கேட்பதற்காகவோ எவரேனும் அந்நியர் வந்து நிற்பார். நம்மைக் கவனிக்க வைக்க அவர் செய்யும் பாவனைகளில் ஓரங்க நாடகத்தின் அத்தனை நுணுக்கங்களுமிருக்கும்.
         
     சாராயக் கடை என்பது தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட ஊரின் மிக விசாலமான கூரையைக் கொண்ட குடிசை. வண்ண வண்ண சீரியல் விளக்குகளாலும் பச்சைக் குழல் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும் அவ்விடத்தில் பழைய தத்துவப் பாடல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்பொழுதேனும் பெரும்போதையில் நாவறண்டு முனகும் எவனுக்கேனும் பெயர் தெரியாத கர்ணனொருவன் தன் சோடா பாட்டிலின் பானத்தைத் தாரைவார்த்துக் கொண்டிருப்பான். கவிதைகளை வாசிப்பதில் கிடைக்கிற அலாதியான கணங்களைச் சாராயக் கடையின் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கும் தருணங்களில் எட்டிவிட முடியுமென்று தோன்றுகிறது. மது விடுதிகள் பெருகிவிட்ட நிலையில் காலத்திற்கேற்ப சாராயக் கடைகள் புதுப்பிக்கப் பட்டாலும் கூட ஓடுகள் வேயப்பட்ட கூரை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி முதலான சிலவற்றைத் தவிர அப்படியொன்றும் பெரிதாய் மாற்றமில்லை.
         
     வில்லியனூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் சொற்ப நாணயங்களுடன் உள்நுழைந்து சாராயத்தை ரமேசும் ரத்தப் பொறியலை நானும் உட்கொண்ட கவித்துவமான தருணம் சாராயக்கடை என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொரு கணத்திலும் நினைவுக்கு வருகிறது. மேட்டுப்பாளயத்திலிருந்து உழவர்கரை செல்லும் குறுக்குச் சாலையில் கிழக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் ஒருமுறை ரமேஷ் ஒரு பெண்ணைக் காட்டினார். அப்பொழுது மணி இரவு எட்டு முப்பது. குளித்து வெகுநாட்களான எண்ணெய் பார்க்காத செம்பட்டைத் தலையுடன் துப்பட்டா இல்லாத பச்சைச் சுடிதார் அணிந்திருந்த அவளுக்கு மிஞ்சிப்போனால் பதினைந்து வயதிருக்கலாம். இருபதடி உயரத்து மரமேடையில் கடைக்கு வெளியில் வரை வழிந்தோடும் அதீத ஓசையுடன் இயங்கிக் கொண்டிருந்த வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியில் கண்புதைத்து மோன நிலை எய்தியிருந்தாள். ரமேஷ் கேட்டார் "இவளது இன்றைய இரவு எப்படிக் கழியும்? உனது புனைவு வெளியை அவள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தொடங்கி விரிக்க முடியுமா?". ரமேஷ் பிரேதனின் சாராயக்கடை குறித்த வாசிப்பிற்கான முன்தயாரிப்புகளை இந்தப் புள்ளியிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வது உசிதமாயிருக்குமென்று நம்புகிறேன்.
         
     மேலோட்டமாகப் பார்க்கையில் ஃபான்சியான பொதுப்புத்தியை அதிர்ச்சி மதிப்பின் மூலம் கவரும் தன்மை கொண்ட சாராயக்கடை என்ற தலைப்பு ஆழ்ந்து வாசிக்கையில் புதுச்சேரியின் வரலாற்றை உட்கொண்டிருக்கிற நிலவியலை உட்கொண்டிருக்கிற அரசியல் சொல்லாடலாக விரிந்து விடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கப்பட்டவர்களை மறக்கப்பட்டவர்களை நினைவுக்குக் கொண்டு வரும் வார்த்தையாக சாரயக்கடை அமைந்து விடுகிறது (எ.கா. சாராயக் கடை - நெம்பர் 18- வில்லியனூர் கொம்யூன்). மேட்டுக் குடியின் பாசிச மனோநிலைக்கு எதிராகப் புறக்கணிக்கப்பட்டவனின் வன்மத்தோடு ஒலிக்கும் குரலாக இதனை வாசிக்க முடியும்.
         
   தன் பூர்வ அடையாளங்களுடன் ஆடையற்றுத் திரிகிற ஆதிக் குடிகளாயினும் சரி பின் நவீன சூழலின் அத்தனை வன்மங்களுக்கும் ஆட்பட்டுள்ள ஓர் தேசிய இனமாயினும் சரி போதை இல்லாத சமூகம் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒவ்வோர் இனமும் தத்தமக்கெனத் தோதுப்படுகிற போதை வஸ்துக்களை உருவாக்கிக்கொள்கிறது. நம் சங்க இலக்கியத்தில் ஆடவரும் பெண்டிரும் அரசனோடு சேர்ந்து மதுவருந்திய நிகழ்வை ஒளவ்வையின் பாடல் தெரிவிக்கிறது.
         
     ஆனால் இன்றோ மதுவிலக்கின் மூலம் பாசிச மனோநிலையின் வன்மம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஒருவனுடய குடிப் பழக்கத்தின் உண்மை இன்மைகளை வைத்தே அவனது புனிதத் தன்மையும் குணத்தின் மேன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்குமானதாகக் கொண்டாடப்பட்ட போதை எதிர்மனித, எதிர்சமூகச் செயல்பாடாக மாற்றப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் கேள்விக்குட்படுத்துகிறது இத்தொகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் புள்ளியிலிருந்து வழிந்து மனித குல வரலாற்றின் அடிமைத்தனங்களை வரையும் கோட்டுச்சித்திரமாக மாறிவிடுகிறது.

               ஒவ்வொரு நகர்வுக்கும் பொருளுண்டு
               ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையே
               அறம் ஓர் ஊறுகாய் மட்டை


என்று சொல்லி ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றையும் கொட்டிக் கவிழ்த்து விடுகிறது. மதுவகைகளிலே கூட வர்க்க பேதம் பாதுகாக்கப்பட்டு சாராயம் தீண்டத் தகாதவர்களின் பானமாகிவிட்ட நிலையில் சூரியன் சந்திரன் மழை என மேன்மையானவை கொண்டாடப் படுவது போல சாராயமும் (சாராயத்தின் மூலம் விளிம்புகளும்) கொண்டாடப்பட வேண்டியதன் தர்க்கக் காரணிகளை இது முன்வைக்கிறது (எ.கா. மாமது போற்றுதும்).
         
     அறிவுமனத்தின் தலையாய கண்டுபிடிப்பு என சக உடலை ஒடுக்குதலும் கண்காணித்தலுமான அரசியலைத் தான் சொல்லமுடியுமென்று தோன்றுகிறது. அதற்கெதிரான கலகமாகத் தீவிர அறிவுமறுப்பை நிகழ்த்திப் பார்க்கும் இத்தொகுப்பு இதுவரை அறம் என்று சொல்லப்பட்டு வந்த பெருங்கதையாடலுக்கெதிரான வன்மத்தைக் கையாள்கிறது (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை). மனித குல வரலாற்றில் இதுவரை உடலை ஒடுக்கியும் கண்காணித்தும் வந்த மொழியைக் கொண்டே போதையின் மூலம் கலவியின் மூலம் பைத்தியத்தன்மையின் மூலம் பலவிதமான மரணங்களின் மூலம் கட்டற்ற வெளிக்குள் உடலை இயக்கும் அரசியலை இது நிகழ்த்துகிறது. அறிவு மறுப்பென்பது அறிவிலி மனத்தின் செயல்பாடல்ல; அது அதீத அறிவின்பாற்பட்டது பேச்சின் உச்சம் மௌனம் என்பதைப்போல.
         
  அகவலி சார்ந்ததும் இயக்கம் சார்ந்ததுமான சுயபுலம்பல்களை கோஷங்களை புகார்களைக் கொண்டிருந்த தமிழ்க் கவிதைகளை வாசிப்பில் பன்மைத்துவம் கொண்டதும் கதைகளின் வெளியை அடைத்துக் கொண்டதுமான இன்றைய கவிதைகளின் தளத்திற்கு அழைத்து வந்ததில் ரமேஷுக்கும் பிரேமுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு வாசிப்பில் பான்டசியாகவும் அடுத்த வாசிப்பில் தீவிர அரசியலைப் பேசுவதுமான கவிதைகள் அவர்களின் தொகுப்புகளில் பெரும்பான்மையான இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையிலும் இத்தகைய கவிதைகளை அடையாளம் காணமுடியும் (எ.கா. தாதா பீட்டர் சிவம்).
         
    நீரில் நனைந்த பறவை தன் உடல் சிலிர்க்க உதறிக்கொள்வது போல வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் அந்தரங்கத் தன்மையை உதிர்த்துவிட்டு சித்த மருத்துவனின் கைவண்ணத்தில் செய்த மூலிகைகளாலான குழல்மாத்திரையாகச் சுருங்கி விடும்பொழுது கவித்துவத்தை உடுத்திக்கொள்கிறது மொழி. மொழியின் அத்தகைய சாத்தியப்பாட்டைப் பல தொனிகளில் பல வடிவங்களில் பல சொல்முறைகளில் நிகழ்த்திப் பார்க்கிறது இத்தொகுப்பு. சாக்லெட் நகரம், சாராயக் கடை - நெம்பர் 13 - உழவர்கரை கொம்யூன், நடைப்பயிற்சி, மாமது போற்றுதும், என் மகளின் அம்மாவுக்கு முதலான கவிதைகளை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கையில் இதனை உணர முடியும். பீர் பாட்டில் முதலான கவிதைகள் மாறுபட்ட ஒப்பீடுகள் மூலம் வாசக மனதில் பல புதிய திறப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. இளங்கோவடிகள், புதுமைப்பித்தன் என வேறு சிலரின் பிரதிகளை ஞாபகப்படுத்துவதன் மூலம் எழுத்துக்கு வெளியே தன் பிரதிகளை எழுதிச் செல்கிற கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை, சாத்தானும் கந்தசாமியும்).
         
         இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் முதல் நாவற்கொம்பு வரை வெளிவந்த ரமேஷ் பிரேமின் கவிதைகளில் நிலவியல் சார்ந்த அடையாளங்கள் வெகு சொற்பமே. (பொதுவாகவே நவீன தமிழ்க் கவிதைகள் நிலவியல் சார்ந்து எழுதப் படுவதல்ல என்ற முடிவுக்கும் வர இடமுண்டு). குருவிக்காரச் சீமாட்டி பரதேசி தொகுப்புகள் தவிர்த்த வேறெந்தப் புனைவுகளிளும்கூட இத்தகைய அடையாளங்களைக் காண்பதரிது. ஆனால் சாராயக்கடை தொகுப்பு பாண்டிச்சேரியின் கடல் காற்றும் சாராய வாடையும் வீசும் நிலவியலை வரைந்து காட்டுகிறது. தொகுப்பின் முதல் கவிதை புதுச்சேரியின் வெள்ளை நகரத்தில் தொடங்கி கடைசிக் கவிதையில் பூர்வ புதுச்சேரியான அரிக்கமேட்டை ஒட்டிய வீராம்பட்டினம் கிராமத்தில் முடிகிறது. வெள்ளை நகரத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் வெள்ளை நகரத்தின் சாயலில் மாறிக் கொண்டிருக்கிற பின்காலனியச் சூழலின் வன்மத்திலிருந்து மீண்டு பூர்வ அடயாளங்களுக்குள் செல்ல வேண்டிய எத்தனிப்பைப் பேகிற கவிதைகளாக இவற்றை வாசிக்க முடியும்.
 
   சர்ரியலிசம் தொடங்கி பின் நவீனத்துவம் வரை நிகழ்ந்த நீண்ட உரையாடலை ஞாபகப்படுத்திக் கொண்டும் இந்தக் கவிதைகளை வாசிக்கலாம். எந்த முந்தயாரிப்புகளும் செய்துகொள்ளாமலும் இவற்றை வாசிக்கலாம். ஆழ்மனத்தின் எண்ண ஓட்டங்களைத் தணிக்கை இல்லாமல் வெளித்தள்ளும்போது எதிர்கொள்கிற அதிர்ச்சியை இக்கவிதைகளின் வாசிப்பிலும் எதிர்கொள்ள நேர்ந்துவிடுகிறது.

நன்றி: புதுப்புனல், கீற்று.

ரமேஷ்-பிரேம் கதைகள் - வரலாறுகளின் சதுரங்கப் பலகை

"எழுது. எல்லாவற்றையும் எழுது. கதையாக எழுது. ஆய்வுரையாக எழுதி விடாதே. அதிகாரத்தின் கண்காணிப்பில் நீ இருக்கிறாய்.. அணுசக்தி மட்டுமே மனிதரை அதிமனிதர் ஆக்கக்கூடியது. நாம் அதற்கு எதிரானவர்கள். நம்மைக் கொல்ல இந்த உலகின் எல்லா நாடுகளின் அரசுக்கும் உரிமையுள்ளது. நாம் புனைவுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். எல்லாம் புனைவுதான். கடவுளைப் போலவே விஞ்ஞானமும் புனைவுதான்."
[குருவிக்காரச் சீமாட்டி, பக். 101 - 102].
 
 
          மிழகத்தின் கிழக்குக் கடலில் காற்றில் குமையும் பிணவாடை மட்டுமே எஞ்சியிருக்கிற ஈழத்துச் சூழலின் தீவிரம் யாரையும் எதுவும் செய்துவிடப் போவதில்லையென்பது யதார்த்தமாகியிருக்கிறது. கால்களுக்குக் கீழே பூமி பத்திரமாயிருக்கிறதாவென ஒவ்வொரு கணமும் சரிபார்த்துக் கொள்கிறேன். எந்த நிமிடமும் என் காலடி நிலம் பிய்த்து வீசப்படலாம் என்கிற அச்சம் மனதை உறையவைக்கிறது. வரலாற்றின் தீராத பக்கங்களில் ஒவ்வொரு விபத்தும் திட்டமிட்டே நிகழ்த்தப் படுகிறது என்கிற பேருண்மை எந்த நேரத்திலும் இரத்த நாளத்தை வெடிக்கச் செய்வதான மரண பயத்தைத் தருகிறது. இந்தப் பரந்துபட்ட உலகில் சொந்தமாக ஒருபிடி மண்கூட இல்லாததைக் கவனப்படுத்தியபடியே அகதிகளின் கதையை நாடோடிகளின் கதையை விளிம்புகளின் கதையைப் பேசும் ரமேஷ்-பிரேமின் பேரினவாத எதிர்ப்புப் பிரதிகளை இத்தகைய கனத்த மனதோடுதான் வாசிக்க நேர்கிறது.
  
          தையல் காரனைப் போலவோ மளிகைக்கடைக் காரனைப் போலவோ என்னிடம் எந்த அளவுகோலுமில்லை. ரமேஷ்-பிரேமின் பிரதிகளை மதிப்பிடுவதான அல்லது இலக்கிய வரலாற்றில் அவற்றின் இருப்பு குறித்ததான நுட்பங்களுக்குள்ளும் நான் போகவில்லை.. ஏறத்தாழ இருபது வருடங்களில் ரமேஷ்-பிரேம் எழுதிய முப்பத்தைந்து கதைகள் குறித்த வாசிப்பனுபவத்தினூடாகச் சக வாசகனுக்கான சில முன்தயாரிப்புகளைத் தருவது என்பதனடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப் படுகிறது.
  
          வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தினூடே அரசியலையும் பொதிந்து வைத்திருக்கிற ரமேஷ்-பிரேமின் பிரதிகளில் பெரும்பாலானவை வாசகனுக்கான கோப்பைகளை மட்டுமே தயாரித்துத் தருகின்றன. அவற்றில் மதுவை ஊற்றிக் கொள்வதோ மருந்தை ஊற்றிக் கொள்வதோ வாசகனின் பிரதியனுபவத்தில்தான் இருக்கிறது. இவ்வகையில் 'பன்றி' கதை மிகுந்த கவனத்திற்குரியது. ஆதித்தாயின்  சாயலில் சாலையோரத்தில் குட்டிகளோடு படுத்திருக்கும் பருத்த பெண்பன்றி நவீன வாகனமான லாரி ஏறி இறந்து விடுவதான இந்தக் கதை சமூகத்தில் பன்றியின் பல்விதமான இருப்புகளை முன்வைக்கிறது. இக்கதையை வெறும் பன்றியைப் பற்றிய கதையாகவும் வாசித்துக் கொள்ளலாம். பெண்களுக்கெதிரான, தலித்துகளுக்கெதிரான, கருப்பர்களுக்கெதிரான, எந்தவொரு விளிம்புக்கும் எதிரான வன்மத்தைப் பேசும் பிரதியாகவும் வாசித்துக் கொள்ளலாம். ஆதிக் குடிகளை நிர்மூலமாக்கும் அதிகார வர்க்கத்தின் அழித்தொழிப்பை கவனப்பத்தும் கதையாகவும் இதனை வாசித்துக் கொள்ளலாம்.
  
          பொதுவாகவே ரமேஷ்-பிரேமின் கதைகள் வாசகனின் வரலாற்றறிவையும் அரசியலறிவையும் ஒருசேர எதிர்பார்க்கின்றன. இவை குறித்த கூடுதல் எதிர்பார்ப்பினால் முதலிரண்டு தொகுப்புகளும் வாசகனை ஒருவித மிரட்சிக்குள்ளாக்கவும் செய்கின்றன. அதே சமயம் வாசக மனதின் அறிதல் திறனுக்குத் தக்கவாறு வேறுவேறு விதமான புளகாங்கிதங்களையும் உடைப்புகளையும் இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.
  
          வரலாற்றுப் பிரதிகளைச் சிதைப்பாக்கம் செய்வதன் மூலம் வரலாற்றின் அரசியல் பின்புலங்களையும் மறைக்கப்பட்ட பக்கங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன ரமேஷ்-பிரேமின் கதைகள். சகமனிதனை அடித்துவிரட்டுவதும் அழித்தொழிப்பதுமாகவே நீளும் வரலாறு பேரினவாதத்தின் பாசிச மனோபாவத்தோடும் மனிதகுல விரோதியொருவனின் வன்மத்தோடும்தான் செயல்படுகிறது. எதிரியின் உடைவாளைக்கொண்டே எதிரியை வீழ்த்துவது போல இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் புனைவுத் தன்மையைக் கொண்டே வரலாற்றின் பாசிச மனோநிலைக்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' பிரதியை அதிலும் குறிப்பாக மைதூனா நாகரீகம் குறித்த பகுதியை இவ்விடத்தில் வாசித்துக் கொள்ளலாம்.
  
          விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த கவனமே இக்கதைகளின் மையநீரேட்டமாக ஒடுகிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே', 'காலவட்டத்திற்குள் இரண்டு கண்கள்' முதலான கதைகளைத் தலித் அரசியலைப் பேசும் கதைகளாக அடையாளம் காணமுடியும். 'பொம்மை-குழந்தை' கதை பைத்தியங்களைப் பேசுவதோடல்லாமல் தெருவோரங்களில் வீசப்படும் குழந்தைகளையும் கவனத்திற்குள் கொண்டுவருகிறது. விளிம்பிலிருப்பவற்றைப் பேசுவது என்பதைத் தாண்டி மையத்தை நிறைத்துக்கொண்டிருந்த குடிகள் விளிம்பிற்குப் பிதுக்கியெறியப் பட்டது பற்றிய கவலையே ரமேஷ்-பிரேமின் கதைகளில் அதிகம் வெளிப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் புதுச்சேரி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பன்றிகளை அதிகார வர்க்கம் அழித்தொழித்தது பற்றிக் கூறும் 'பன்றி' கதை இத்தகைய அரசியலைப் பேசுவதே. இவர்களின் கதைகள் பூர்வ குடிகள் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றையும், அகதிகளின் அவலங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன.
  
          ஆதி மனோநிலைக்கும் நவீன மனோநிலைக்கும் இடையிலான முரண்களினூடாக நகர்ந்து அறிவியலின் வன்முறையை அழித்தொழிப்பின் வன்முறையைப் பேசும் கதைகளாக இவற்றை வாசிக்க இயலும். விஞ்ஞானத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி ஆதி மனோநிலைக்குத் திரும்புவதன் மூலம் இயற்கையோடு கலப்பதே இக்கதைகளின் எத்தனிப்பாக உள்ளது. இந்த எத்தனிப்பு இயல்பாகவே சூழலியல் குறித்த கவனமாகவும் விரிந்து விடுகிறது. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன', 'நத்தைக் கதை' முதலானவற்றில் அணுசக்தியின் பேரழிவுகளைப் பேசுவதும், ஆதித் தாய் பற்றிய குறிப்புகளில் அவள் பச்சை நிறத்தவளாயிருப்பதும் (எ.கா. ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம், பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை) இந்த வகையில் கவனம் பெறுகின்றன.
  
          அறிவு அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அதிகாரம் பேரினவாதத்திற்குத் துணைபோகிறது. பேரினவாதம் தனது ஒற்றை அதிகாரத்தின் மூலம் விளிம்புகளை மறக்கடித்து விடுகிறது. இத்தகைய மறக்கடிப்பு அரசியலுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்தும் பிரதிகளாக ரமேஷ்-பிரேமின் கதைகளை வாசித்துக்கொள்ள முடியும். தன் வீட்டிலேயே வளர்ந்த பூனையை வீட்டுக்காரன் அடித்துத் தின்றுவிட்டுக் குறவன் தூக்கிப் போயிருக்கலாமெனக் கதைகட்டும் 'தொடர் மழைக் காலம்' கதை பேரினவாதமும் ஊடகமும் இணைந்து நிகழ்தும் மறக்கடிப்பு அரசியலைப் பேசும் குறியீட்டுக் கதையாக விரிகிறது. காலனியாதிக்கத்தின் அரசியலைப் புனைவினூடாக வெளிப்படுத்துவது (ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம்), நவீன பேரரசுகளின் ஏகாதிபத்திய வன்மத்தால் அழித்தொழிக்கப் பட்டவர்களைப் பட்டியலிட்டு அதன் அரசியல் பின்னணிகளைத் தெளிவு படுத்துவது (மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி) ஆகியவற்றின் மூலம் இவர்களின் பிரதிகள் பேரினவாதத்தின் முகமூடியைக் கிழித்தெறிகின்றன.
  
          நம் கண்ணெதிரே நிகழ்த்தப்பட்ட ஈழத்துப் பேரினவாதத்தின் வன்முறையை ரமேஷ்-பிரேம் தங்கள் கவிதைகளில் போலவே கதைகளிலும் தொடர்ந்து பேசிவந்துள்ளதை இப்பிரதிகளில் உணரமுடிகிறது. அகதி முகாம்களின் அவலத்தைப் பேசும் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை' கதையும் யாழ்ப்பானத்துத் தெருக்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவையும் அந்தப் போரின் தொடர்ச்சி கடல்கடந்து நம்மிடம் வர வெகுநாட்களில்லை என்னும் அபாய அறிவிப்பையும் வெளிப்படுத்தும் 'கோடைப்பகல் தூக்கம்' கதையும் இங்கு கவனம் கொள்ளத்தக்கன. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன' கதையில் உலகின் எந்தப் பேரினவாதத்தின் பேரழிவுடனும் பொருத்திப் பார்க்க முடியுமெனினும் அதன் மங்கலான நிலவியல் சித்திரம் அதைத் தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் பிரதியாக வாசிக்கும் மனோநிலைக்கு உட்படுத்திவிடுகிறது.
  
          பேரினவாதத்திற்கெதிரான கலகப் பிரதிகளான ரமேஷ்-பிரேம் கதைகள் விளிம்புநிலையரசியலைப் பேசுபொருளாகக் கொண்டது போலவே வடிவ ரீதியிலும் உத்தி ரீதியிலும் கூட ஏகத்துவத்தை உடைத்துப் பன்மைத்துவத்தை உடுத்துக்கொள்கின்றன. நேர்கோட்டு வாசிப்பிற்கெதிராக வரிசை மாற்றி அடுக்கப்பட்ட இப்பிரதிகள் அர்த்தங்களைத் தொடர்ந்து ஒத்திப் போட்டுக்கொண்டே வருவதன் மூலம் மையமறுப்பு அரசியலை நிகழ்த்துகின்றன. வாசகனை முடிவை நோக்கி நெருங்க விடாமல் செய்வதன் மூலமே இவை அதிகாரத்திற்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. கால, இடப் பரிமாணங்களில் செங்குத்தாகவும் கிடைக்கோட்டு நிலையிலும் நகரும் இப்பிரதிகள் ஒருவித எண்கணித விளையாட்டை நிகழ்த்திக் காட்டுகின்றன. முதலிரண்டு தொகுப்புகளில் இத்தகைய எராளமான கதைகளைக் காணமுடியும். வரலாற்றின் கருப்புப் பக்கங்களின் கருதுகோள்களைக் கொண்டு புதிய புதிய தொன்மங்களைப் புனையும் இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் உண்மைத் தன்மைக்கும் புனைவுத் தன்மைக்கும் இடையிலான மொழி விளையாட்டின் சதுரங்கப் பலகையாக விரிந்து விடுகின்றன.
  
          உலகின் ஒட்டுமொத்த அரசியலும் நிகழ்த்தப் படுவதற்கான களங்களாக உடலையும் மொழியையும் முன்னிறுத்தும் ரமேஷ்-பிரேம் கதைகள் தனது பூர்வ அடையாளங்களை மீட்டெடுக்க எத்தனிக்கும் இனங்களின் அடையாள அரசியலுக்கான கருவியாக மொழியை முன்மொழிகின்றன. உடல் ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உட்படுத்தப்படுவது. அந்தக் கண்காணிப்பிலிருந்து தப்பித்துப் புனைவின் மூலம் உடலைப் பூரண விடுதலை பெற்றதாகக் கொண்டாட வைக்கும் உடலரசியலை நிகழ்த்திப் பார்க்கின்றன ரமேஷ்-பிரேம் கதைகள். கண்காணிப்புக்குட்பட்ட லிங்க மையப் புணர்ச்சியிலிருந்து விடுபட்டு ஆணோடு ஆண் புணர்தல், பெண்ணோடு பெண் புணர்தல், அலியின் போகம், ஆண் சிறுமியோடு போகம் கொள்ளுதல், பெண் சிறுவனோடு போகம் கொள்ளுதல், ஆண் பெண்மிருகத்தைப் புணர்தல், பெண் ஆண்மிருகத்தைப் புணர்தல், கூட்டுப் புணர்ச்சி, யாரும் யாரோடும் உறவு கொள்ளும் கட்டற்ற வெளிக்கு உடலை நகர்த்துதல் என உடலைப் பூரண விடுதலையுடைய ஒன்றாகக் கொண்டாடுகின்றன இக்கதைகள். அதிகார மையத்தின் கண்காணிப்பு அரசியலை உடலின் மூலமாக மீறும் கலக ஏற்பாடு இது.
  
          உடல் அரசியலைப் பேசும் ரமேஷ்-பிரேம் கதைகள் எல்லா அதிகாரத்திற்கும் மூலகாரணியாக அதிகாரத்தின் பேருருவாக இருப்பது ஆண்மையமே என்னும் புள்ளியிலிருந்து கிளைத்து லிங்க மையத்தை உடைத்துப் போடும் பாலரசியல் பேசும் கதைகளாகப் பரிணமிக்கின்றன. ஆதிச் சமூகம் பெண் தலைமைச் சமூகமாகவே இருந்ததை இக்கதைகள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆதி சக்தியிலிருந்தே மும்மூர்த்திகளும் பிறந்ததான தொன்மம் ஊடுபிரதியாகச் சொல்லப்படுகிறது. 'வியாசகுலம்' கதை லிங்க மையத்தை ஆட்டம் காணச் செய்து பெண்ணின் இருப்பு குறித்த உரையாடலை நிகழ்த்துகிறது. வைத்தியனொருவன் சிவனின் பெயரால் பிள்ளையில்லாத பெண்களுக்குத் தன் விந்தையே மருந்தாகச் செலுத்துவதைப் பேசும் அக்கதை 'பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் கொள்கலம் தானா? பிள்ளையில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழவே முடியாதா?' என்னும் கேள்விகளை முன்வைக்கிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே' கதையில் ஆண் கடவுளை வழிபடும் முப்புர ராசாக்களால் விரட்டியடிக்கப்பட்டு வெகு காலத்திற்குப் பிறகு தன் பூர்வ நிலத்திற்கு மீளும் தாழ்த்தப்பட்ட குடிகளுக்கு வழிபடுவதற்கெனப் பெண் கடவுள் காத்திருக்கிறது. 'குருவிக்காரச் சீமாட்டி' கதை ஆண்களை வெளியே நிறுத்தி பெண்களுக்கான கதை வெளியை உருவாக்குகிறது. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' கதை பெண்ணிய அரசியலைப் பேசும் தொன்மங்களைப் புனைகிறது..
  
          ஆண் தன்மையுடைய பிரதிகள் மையத்துடன் இருக்கும். அதன் விரைப்பு முடிவை நோக்கிச் சுட்டியபடி இருக்கும்.. பெண் தன்மையுடைய பிரதிகளில் இறுக்கமிருக்கலாம். ஆனால் தளர்வுகள்- மையபடுத்தப் படாத பல புலன் சிலிர்ப்புகள்- கலைந்து கிடக்கும் பலவழிப் புழைகள்- விட்டு விட்டுத் தொடரும் அர்த்தத்தின் திருகு மாற்றங்கள் என விரிந்து கொண்டேயிருக்கும். (கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். ப.90). ரமேஷ்-பிரேமின் கதைகளும் அக்கதைகளின் அரசியலும் இத்தகைய பெண் தன்மை கொண்டவையாகவே இயங்குகின்றன.
  
          ரமேஷ்-பிரேம் கதைகளை இரண்டாயிரத்திற்கு முன்பு எழுதப்பட்டவை, இரண்டாயிரத்திற்குப் பின்பு எழுதப்பட்டவை என்னும் இரண்டு பகுப்புகளுக்குள் வைத்துப் பார்க்க முடியமெனத் தோன்றுகிறது. இப்படியொரு கோட்டை வரைந்து கொள்கையில் இக்கதைகளின் பரிமாணங்களில் எற்பட்ட மாற்றங்களெனச் சிலவற்றை அனுமானிக்க முடியும். முந்தைய காலக் கதைகள் உலக வரலாறுகளையும் மேற்கத்திய சிந்தனைத் தொகுப்புகளையும் அதிகம் உட்கொண்டு இயங்கும் கதைகள். இட, காலப் பரிமாணங்களின் மங்கலான சித்திரத்தை மட்டுமே வரையும் இக்கதைகள் அந்தரத்தில் தொங்குவதான பாவனையை ஏற்படுத்துகின்றன. அதிகம் பாத்திரப் பெயர்களில்லாத நீண்ட வாக்கிய அமைப்புடன் எழுத்து வழக்கிலான உரையாடல்களைக் கொண்டியங்கும் கதைகளாக இவற்றை வரையறுத்துக் கொள்ளலாம். கால அடுக்குகளில் முன்னும் பின்னுமாக நகர்வதன் மூலம் வாசகனின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் கதைகளாக இவை இயங்குகின்றன. 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்' தொகுப்பை வாசகனின் அதீத பொறுமையை எதிர்நோக்கும் தொகுப்பாக அடையாளம் காணலாம்.
  
          இரண்டாயிரத்திற்குப் பிறகு வெளிவந்த கதைகளில் கூறுமுறையில் எளிமை கூடியிருக்கிறது. புதுவையின் நிலவியலை வரைந்து காட்டும் கதைகளாக இவற்றை வாசிக்கமுடியும். இட, காலப் பரிமாணங்களின் தெளிவான சித்திரத்தை இவற்றில் காணலாம். கடந்த இருநூறாண்டு கால எல்லைக்குட்பட்ட கதைகளாகவே இயங்கும் இவற்றில் எளிய வாக்கிய அமைப்பையும் பேச்சுவழக்கிலான உரையாடல்களையும் காணமுடியும். தலைப்பிடுவதில் கூட முந்தயகாலக் கதைகளுக்கும் பிற்காலக் கதைகளுக்குமிடையே மிகுந்த வித்தியாசத்தைக் காணமுடிகிறது. (எ.கா. மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி, பன்றி).
  
          ரமேஷ்-பிரேமின் கதைகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொள்வோமெனில் விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துப் பேசும் கதைகளெனவும் பூர்வ மையம் விளிம்புகளில் வழியவிடப்பட்டதின் வன்மத்தைப் பேசும் கதைகளெனவும் வரையறை செய்து கொள்ளலாம். எனினும் அர்த்தங்களை அடுத்த கணத்திற்கென ஒத்திபோடும் இப்பிரதிகளில் வாசக அனுபவத்தினூடாக முடிந்த ஒற்றை முடிவுக்கு வரமுடியுமெனத் தோன்றவில்லை. சக வாசகராகிய உங்களுக்கு இக்கதைகள் என்னுடைய வட்டத்திற்கு வெளியே வேறுவிதமான உடைப்புகளை ஏற்படுத்திவிடும் சாத்தியமிருக்கிறது. எனவே இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளாமல் தொடர் ஓட்டத்தின் முதல் ஓட்டக்காரனைப் போல இதன் தொடர்ச்சியை உங்கள் பொறுப்பில் விட்டு விடுகிறேன். எனக்குச் சார்பாகவோ எதிராகவோ சம்பந்தமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் இதன் தொடர்ச்சியை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
நன்றி: மணல் வீடு ( டிசம்பர் 2009)

வார்த்தை விளையாட்டு





தேர்ந்த கதைசொல்லியான நீ வரலாறெழுதத் திட்டமிடுகிறாய்
நான்காயிரம் வருடமாய் ஆற்றங்கரையில் புதைந்திருந்த எருது
குதிரையாக மாறி கனைக்கத் தொடங்குகிறது
நீயெழுதும் அந்த எருதைப் பற்றிய ஆவணக் குறிப்புகளுக்கு
வெள்ளைக் குதிரையின் கதை எனப் பெயரிடுகிறாய்
எம திசையில் பிணமெரிக்கும் நாகார்ஜுனனை
புத்தனென்றே விளிக்கிறாய்
தியான புத்தனின் பின்னால் சுவரில் பதியும்
நிழலை விநாயகனென்று வழிபடுகிறாய்
வார்த்தையென்பது ஒரு கண்ணாமூச்சி
உனது வார்த்தையை வேடிக்கை பார்க்க வந்த என்னையும்
சொல் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறாய்
மொழியின் பொருண்மை வெளியில் ஆட்டம் தொடங்குகிறது
தூய்மை விரும்பியான நீ பூனைக்குட்டியாக
மாறி ஒளிந்துகொள்கிறாய்
நான் கொழுத்த பன்றியாகி வார்த்தைகளைக் கிளறுகையில்
மல வாடை வீசுவதாய் முகம் சுழிக்கிறாய்
சினந்த இராணுவ வீரனின் தொனியில்
எனக்கும் நீயே பெயரிடுவதாகக் கூறி
என்னை ஒளிந்துகொள்ளச் சொல்கிறாய்
பிடிமானமற்று சரியும் வார்த்தைகளின் வெளியில்
பதுங்கு குழி தேடிக் களைத்துப் போகிறேன்
நான் மூச்சு வாங்கும் கணத்தில் நீ கொழுத்த பூனையாக மாறி
முட்டுச் சுவரில் எழுதத் தொடங்குகிறாய்
என் பெயரை சுண்டெலியென

                                                    நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )

நிறமற்றவனின் கதை





கடல் மணலில் காலாற நடந்து வெகு காலமாகிறது
நமது தற்கொலைக்கு முன் தினம்
இறுதிச் சடங்கின் முன் தயாரிப்பு பற்றி
ஆலோசித்தபடியே உன்னோடு நடந்தது

அப்பொழுதும் இப்படித்தான் மழை பெய்தது
கரைந்து கொண்டிருந்த நமது மணல் வீட்டுக்காக
அழுதுகொண்டே திரும்பினேன்
நீயும் கரைந்து கொண்டிருந்தாய்

என் போலவே உனக்கும்
மரணத்தின் பின் வாழ்க்கை
யாருமற்றுக் கழிகிறதா

நேற்றைய மழையில் இதே
கடற்கரையில் எதிர்வந்த உன் கணவன்
எனது வெளிர் நீல சாயம்
கரைவதாய் சொல்லிப் போனான்

என் மீது விழுந்தொழுகும் இன்றைய மழை
நிறமின்றி வடிகிறது

                                                 நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )

பட்டாம்பூச்சி மேய்ப்பவன்





பட்டாம்பூச்சி மேய்ப்பவன் வந்து போகிறான்
உடம்பு முழுக்க சூழும் வண்ணத்துப் பூச்சிகளுடனும்
தொடரும் குழந்தைகளுடனும்
வருவோர் போவோர்க்கெல்லாம் கையளிக்கிறான்
விலை பேச இயலாத அவனது பட்டாம்பூச்சிகளை
அவ்வப்போது
பறக்கக் கற்றுக்கொண்ட ஒன்றிரண்டு குழந்தைகளை

அவனிடம் விசேஷமானது
மீன் தொட்டியில் விடுவதற்கென
நேர்த்தியாக  நீந்தப் பழகிய வண்ணத்துப்பூச்சி
ஒவ்வொரு  வண்ணத்துப்பூச்சியைக்  கையளிக்கும்போதும்
ஒவ்வொரு முறை நிகழ்கிறது அவனது மரணம்
பட்டாம்பூச்சியின் மூன்றாம் சிறகசைப்பில் உயிர்த்தெழும்போது
சிலுவையை மொய்க்கிறது பட்டாம்பூச்சி

கவனிப்பாரற்ற குரோட்டன்களின் நகரில்கூட
வெள்ளி முளைத்த பின்னிரவில்
பட்டாம்பூச்சி மேய்ப்பவன் வருவதுண்டு
அவன் பேசுவதேயில்லை
பட்டாம்பூச்சிகள் மட்டுமே பேசுகின்றன
இறகில் எழுதப்பட்ட வர்ணங்களின் மொழியில்

தனக்கென வண்ணத்துப்பூச்சிகளைத் தவிர ஏதுமற்ற
அவனது பயணம் தொடர்கிறது
வண்ணத்துப்பூச்சியின் மொழியைப் புசித்தபடி

                                   நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )